அறிவிப்போடு நிற்கும் தீயணைப்பு நிலையம்: எப்போது அமையும் என மக்கள் எதிர்பார்ப்பு
காரைக்குடி: புதுவயல் பேரூராட்சியில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியான நிலையில், அதற்கான எந்தப் பணிகளும் தொடங்கவில்லை.புதுவயல் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. இந்த அரிசி ஆலைகளில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வட மாநில தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்குள்ள அரிசி ஆலைகள் மற்றும் நெல் கோடவுன்களில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. புதுவயலில் உள்ள அரிசி கோடோவுன் மற்றும் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்க காரைக்குடி தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனம் வர வேண்டியுள்ளது. 15 கிலோமீட்டர் தொலைவிலிருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள் மொத்த பொருட்களும் எரிந்து வீணாகிறது. இதனால் புதுவயல் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து காரைக்குடி எம்.எல்,ஏ., மாங்குடி தொடர்ந்து சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் கடந்த ஜூனில் புதுவயலில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியானதோடு சரி இதுவரை தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான எந்த தொடக்கப் பணிகளும் நடைபெறவில்லை.அதிகாரிகள் கூறுகையில்: புதிதாக தீயணைப்பு நிலையம் நிறுவப்படும் போது வாடகை கட்டடத்தில் தான் இயங்கும். பின்பு தான், தீயணைப்பு நிலையத்திற்கு என புதிய சொந்த கட்டடம் கட்டப்படும். தீயணைப்பு வாகனம் அவசரத்திற்கு சென்று வர போதுமான வசதிகள் இருப்பது மிக அவசியம். தற்போது புதிய வாடகை கட்டடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்ட பின்பு முடிவு செய்யப்படும்.