சி.பி.ராதாகிருஷ்ணனை தி.மு.க., எம்.பி.,க்கள் ஆதரிக்க வேண்டும் சொல்கிறார் எச்.ராஜா
சிவகங்கை:''துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனை தி.மு.க., உள்ளிட்ட தமிழக எம்.பி.,க்கள் ஆதரிக்க வேண்டும்,'' என, சிவகங்கையில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார். அவர் கூறியதாவது: பிரதமராக இருந்தவர்களில் அதிக முறை தமிழகத்திற்கு வந்தவர் தற்போதைய பிரதமர் மோடி தான். அவர் தமிழகத்திற்கு அள்ளி கொடுக்கும் வள்ளலாக உள்ளார். கடந்த முறை துாத்துக்குடி, கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்த பிரதமர் மோடி தமிழகத்திற்கு மட்டும் ரூ.4100 கோடிக்கான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,யும், மகாராஷ்டிரா கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணனை நிறுத்தியதற்கு மனமார்ந்த நன்றி. தமிழகத்தில் லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் 57 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதை தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் கருத்தில் கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வந்திருக்கலாம் என்ற நிலை 1996ல் இருந்தது. த.மா.கா., தலைவர் மூப்பனாரை பலர் காங்., கட்சியில் கூட முன்மொழிந்தவர்கள் உண்டு. இருந்தாலும் அது நடக்காமல் போய்விட்டது. அந்தமாதிரி இல்லாமல் ஒரு தமிழர் துணை ஜனாதிபதியாக வர தமிழகத்தை சார்ந்த தி.மு.க., உள்ளிட்ட தமிழக எம்.பி.,க்கள் ஓட்டளிக்க வேண்டும் என்றார்.