வட்டி மானியத்துடன் தொழில் கடன் கலெக்டர் பொற்கொடி தகவல்
சிவகங்கை: மாவட்டத்தில் வங்கி கடன் பெற்று திரும்ப செலுத்திய மகளிர் சுய உதவி குழுவினருக்கு 2 சதவீத வட்டி மானியத்துடன் தொழில் கடன் வழங்கப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது, ஊரக வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் கிராமங்களில் உள்ள மகளிர் குழுவில் 2 ஆண்டு வங்கி கடன் பெற்று, திரும்ப செலுத்திய அனுபவம் பெற்ற வயது 18 முதல் 55 க்கு உட்பட்ட அனைத்து மகளிரும் பயன்பெறும் வகையில், வங்கிகள் மூலம் 2 சதவீத வட்டி மானியத்துடன் தொழில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இக்கடன் பெற விரும்பும் மகளிர் தங்கள் ஊராட்சியில் உள்ள கூட்டமைப்பு ஊழியர்களான தொழில்சார் சமூக வல்லுநர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படும் காளையார்கோவில், தேவகோட்டை, மானாமதுரை வட்டாரங்களில் அக்., 23 முதல் 25 வரை அந்தந்த வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நடக்கும் முகாமில் விண்ணப்பத்தை சமர்பிக்கவும். முகாமிற்கு வர விரும்பும் மகளிர்கள் ஆதார், ரேஷன் கார்டு, 2 போட்டோ, பான் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் இதர தொழில் சார்ந்த ஆவணங்களுடன் வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார அணி தலைவரை அணுகி விபரம் பெறலாம் என்றார்.