உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மக்காச்சோளம் பயிரிட இடுபொருள் மானியம் இணை இயக்குனர் தகவல்

மக்காச்சோளம் பயிரிட இடுபொருள் மானியம் இணை இயக்குனர் தகவல்

சிவகங்கை : மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் 90 ஆயிரம் எக்டேரில் மானாவாரி மற்றும் கண்மாய் பாசனம் மூலம் ஒரு போக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டாக வறட்சியால் நெல் சாகுபடி பாதித்துள்ளது. எனவே நெல்லுக்கு மாற்று பயிராக சோளம் மற்றும் சிறுதானியங்களை சாகுபடி செய்வதற்கான திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. குறுகிய காலத்தில் நிறைவான மகசூலுடன் அதிக வருவாய் பெற மக்காச்சோளம் பயிர் சாகுபடி முக்கிய பயிராகும். குறுகிய கால பயிர் என்பதால் பாசன நீர் குறைவாக, மானாவாரிக்கு ஏற்ற பயிராக இருக்கும். வேளாண் துறை மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மக்காச்சோள செயல்விளக்க திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வீரிய ஒட்டுரக மக்காச்சோள விதைகள், உயிர் உரங்கள், மண் மேம்பாட்டுக்கான இயற்கை இடு பொருட்கள் ஆகியவை முழு மானியத்தில் வழங்க, இம்மாவட்டத்திற்கு 20 எக்டேரில் இலக்கு நிர்ணயித்து, மக்காச்சோள பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மக்காச்சோள சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள், சிவகங்கை, காளையார்கோவில் வட்டாரங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ