சிறுகூடல்பட்டி சிவன் கோயிலில் பிப்.3ல் கும்பாபிஷேகம்
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் சிறுகூடல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகரச்சிவன் கோயில் கும்பாபிஷேகம் பிப்.3 ல் நடைபெறுகிறது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டு பூர்த்தியானதை அடுத்து தற்போது திருப்பணிகள் நடந்தது. திருப்பணியில் அனைத்து சன்னதி,கோபுர கோயிலைச் சுற்றி புதிதாக கிரிவலம் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிேஷகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை ஜன.31 காலை 8:15 மணிக்கு அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. யாகசாலை பூஜைகளை பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சார்யார்கள் செய்கின்றனர். அன்று மாலையில் முதற்கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.தொடர்ந்து இரண்டாம் நாள் காலையில் இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும், மூன்றாம் நாள் காலையில் நான்காம் காலமும், மாலையில் ஐந்தாம் கால யாகபூஜையும் நடைபெறுகிறது. பிப்.3ல் காலை 7:15 மணிக்கு ஆறாம் கால யாக பூஜையும், காலை 9:50 மணிக்கு விமான கும்பாபிேஷகமும் நடைபெறும். பின்னர் மூலஸ்தான மகா கும்பாபிேஷகம் நடைபெறும். இரவில் திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்தி உலா நடைபெறும். ஏற்பாட்டினை சிறுகூடல்பட்டி,சென்னல்குடி,குமாரப்பேட்டை நகரத்தார்கள் செய்கின்றனர்.