l செயல் இழந்து வரும் உழவர்சந்தைகள் l இளையான்குடி, மானாமதுரையில் சந்தை
மானாமதுரை, ஜூலை 15- சிவகங்கை மாவட்டத்தில் செயலிழந்து கிடக்கும் உழவர் சந்தைகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும், மானாமதுரை, இளையான்குடி பகுதியில் புதிதாக உழவர் சந்தை துவக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழகத்தில் கருணாநிதிமுதல்வராக இருந்த போது தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் துவக்கப்பட்டன. அடுத்து நடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் உழவர் சந்தை கண்டு கொள்ளப்படாததால் பெரும்பாலான ஊர்களில் உழவர்சந்தை முழு அளவில் செயல்பாடில்லாமல் பெயரளவிற்கு இயங்கியது.மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் அனைத்து ஊர்களிலும் உள்ள உழவர் சந்தைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆட்சிக்கு வந்து 4 வருடங்களுக்கு மேலாகியும் பெரும்பாலான ஊர்களில் இன்னும் முழுமையாக உழவர்சந்தைகள் செயல்பாட்டிற்கு வராததால் விவசாயிகள் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட 5 ஊர்களில் செயல்படும் உழவர் சந்தை பெயரளவுக்கு செயல்பட்டு வருவதால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை நேரடியாக மக்களிடம் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் மானாமதுரை இளையான்குடி பகுதியில் உழவர் சந்தை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் விளை பொருட்களை வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கல்வெளிபொட்டல் விவசாய சங்க நிர்வாகி தங்கபாண்டியன் கூறியதாவது: மானாமதுரை அருகே திருப்பாச்சேத்தி, மாரநாடு,ஆவரங்காடு, முத்தனேந்தல், கால்பிரபு, பீசர்பட்டினம், நத்தப்புரக்கி, ஆலம்பச்சேரி, மேலநெட்டூர், தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களிலும் இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூர், வேலடிமடை, கோச்சடை உள்ளிட்ட கிராமங்களிலும் காய்கறிகளை விவசாயிகள் விளைவிக்கின்றனர். இவற்றை நேரடியாக மக்களிடம் விற்பனை செய்ய மானாமதுரை, இளையான்குடி பகுதியில் உழவர் சந்தை இல்லாத காரணத்தினால் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உழவர் சந்தை இருந்தால் விளைவிக்கப்படும் காய்கறிகளை அரசு டவுன் பஸ்களில் இலவசமாகவே கொண்டு சென்று அங்கு மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்க வழி உள்ளது.மாவட்ட நிர்வாகம் மானாமதுரை,இளையான்குடி பகுதிகளில் உழவர் சந்தைகளை துவக்க வேண்டுமென்றும்,சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட 5 ஊர்களில் பெயரளவிற்கு செயல்படும் உழவர் சந்தைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.