உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் பகுதியில் மழை பற்றாக்குறை ; சரணாலயத்தில் கூடு கட்ட பறவைகள் தயக்கம்

திருப்புத்துார் பகுதியில் மழை பற்றாக்குறை ; சரணாலயத்தில் கூடு கட்ட பறவைகள் தயக்கம்

திருப்புத்துாரிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில் 15 கி.மீ. துாரத்தில் உள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். குளிர் பிரதேசத்திலிருந்து நாரை,கொக்கு,வாத்து இன பறவைகள் வலசை போதல் ஆக இங்கு வந்து செல்கின்றன. இங்குள்ள கொள்ளுகுடிப்பட்டி கண்மாயில் உள்ள நாட்டுக்கருவை மரங்களில் பறவைகள் கூடுகட்டி இன விருத்தி செய்கின்றன. வழக்கமாக ஆகஸ்ட் இறுதியில் வந்து கோடைகாலத்தில் சென்று விடும். தற்போது ஆகஸ்ட் கடைசி வாரத்தில் கருப்பு அரிவாள் மூக்கன், பாம்புதாரா போன்ற பறவைகள் வந்தன. ஆனால் கூடு கட்டி தங்காமல் வெளியேறி விட்டன. தற்போது நேற்றும் சில பறவைகள் வந்துள்ளன. அவை கூடு கட்டி தங்குமா என்பதை கிராமத்தினர் கண்காணிக்கின்றனர். வழக்கமாக பறவைகள் வந்து கூடு கட்டி தங்கினால் மழை காலம் துவங்கி விடும் என்று கிராமத்தினர் கூறுகின்றனர். இப்பகுதியில் பரவலாக போதிய மழை இல்லாததாலும், கண்மாய்களில் போதியநீர் இருப்பு இல்லாததும், பரவலாக விவசாயப் பணிகள் நடைபெறவில்லை. இதனால் பறவைகள் கூடு கட்ட தயங்கி வெளியேறுகின்றன. தொடர்ந்து மழை பெய்தால் தான் சுற்றுப்புற வயல்களில் விவசாயப்பணிகள் நடந்தால் பறவைகளின் உணவாக புழு,பூச்சி கிடைக்கும். பறவைகளும் கூடு கட்டி தங்கி இனவிருத்தி செய்யும். பறவை ஆர்வலர் ஐசக் கூறுகையில், தாமதமாக பருவ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு நல்ல மழை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சரணாலயத்தில் பறவைகள் இனவிருத்தி காலம் என்பது நவம்பர் முதல் ஜனவரி வரை. கடந்தாண்டு பெரிய அளவில் பறவைகள் கூடு கட்டவில்லை. மழையும் எதிர்பார்த்த அளவில் இல்லை.இந்தாண்டு பறவைகள் தாமதமாக கூடு கட்டி தங்கும் வாய்ப்பு உள்ளது' என்றார். வனத்துறையினர் கூறுகையில், போதிய மழை இல்லாததால் கண்மாய்களில் சரியான நீர் இருப்பு இல்லை. கரையோரம் நடவு செய்யப்பட்டுள்ள வெட்டி வேர் கருகாமலிருக்க குழாய் மூலம் நீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. சிறிய அளவில் பறவைகள் வருகை இருந்தாலும் இதுவரை தங்கவில்லை. செப். கடைசியிலிருந்து மழையும், பறவைகளும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ