திருப்புவனத்தில் நிரம்பி வரும் கண்மாய்
திருப்புவனம்: திருப்புவனம் தாலுகாவில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்புவனம் தாலுகாவில் வடகிழக்கு பருவமழையை நம்பி செப்டம்பர் தொடங்கி டிசம்பர் வரை நான்காயிரம் ஹெக்டேரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. செப்டம்பரில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இதனை பயன்படுத்தி நாற்றங்கால் அமைப்பார்கள், ஒரு மாதம் கழித்து நடவு செய்யும் போது வைகை அணையில் இருந்து பாசன தேவைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு கண்மாய்களுக்கு தண்ணீர் வரும், அதன் மூலம் தொடர்ச்சியாக விவசாயம் நடக்கும், இந்தாண்டு திருப்புவனம் பகுதியில் போதிய அளவு வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. தேனி, மதுரை மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் நீர் வரத்து இருந்ததால் கண்மாய்களுக்கு பாசனத்திற்கு திறக்கப்பட்டது. அதன் பின் நவம்பர் 2 முதல் ஆறாம் தேதி வரை சிவகங்கை மாவட்ட பாசன தேவைக்கும் தண்ணீர் திறக்கப்பட்டதால் கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரித்தது. பிரமனூர் கண்மாய் நிரம்பி விட்டது. மாரநாடு கண்மாய் 70 சதவீதமும், பழையனூர் கண்மாயில் 40 சதவிகிதம் நிரம்பியுள்ள நிலையில் கீழசொரிகுளம், மேலசொரிகுளம் கண்மாய்களுக்கு தண்ணீர் தேவை என்பதால் பழையனூர் கண்மாய்க்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு மற்ற கண்மாய்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் : 62 கண்மாய்களிலும் 40 முதல் 70 சதவிகிதம் வரை தண்ணீர் உள்ளது. இதில் பிரமனூர் கண்மாய் முதலில் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. தொடர்ச்சியாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கண்மாய்கள் நிரம்ப வாய்ப்புள்ளது, என்றனர்.