உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குறைந்த மின்னழுத்தம் திருப்பாச்சேத்தி மக்கள் தவிப்பு

குறைந்த மின்னழுத்தம் திருப்பாச்சேத்தி மக்கள் தவிப்பு

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தியில் டிரான்ஸ்பார்மர் பழுது காரணமாக குறைந்த மின்னழுத்தம் நிலவுவதால் பொதுமக்கள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். திருப்பாச்சேத்தி அழகிய நாயகி அம்மன் கோயிலைச் சுற்றிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் உள்ளன. இவற்றிற்கு மின்சாரம் வழங்க பல ஆண்டுகளுக்கு முன் டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டது. ஆரம்பத்தில் 100 இணைப்பு மட்டும் இருந்த நிலையில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகள் தோறும் பிரிஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், ஏ.சி., என எலக்ட்ரிக் சாதனங்களின் பயன்பாடு அதிகம். நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின் இணைப்புகளுக்கு ஏற்றவாறு கூடுதல் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அல்லது கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படவில்லை. அதிகமான மின் இணைப்புகளால் அடிக்கடி டிரான்ஸ்பார்மர் பழுதானது. கடந்த ஜூலையில் டிரான்ஸ்பார்மர் முற்றிலும் பழுதானதால் இரண்டு நாட்களாக மின்சாரம் இன்றி தவித்து வந்தனர். மின்வாரிய அதிகாரிகள் வேறு டிரான்ஸ்பார்மரை பொருத்தி மின்சாரம் விநியோகித்தனர். வேறு டிரான்ஸ்பார்மர் பொருத்தியும் மின்சாரம் சீரான முறையில் விநியோகிக்கப்படவில்லை. குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்களை இயக்கவே முடியவில்லை. மீறி இயக்கினால் அடிக்கடி பழுதாகி வருகிறது. நகர்ப்புறங்களில் குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்ய குறிப்பிட்ட இடங்களில் மினி டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டுள்ளது. அதே போல திருப்பாச்சேத்தியிலும் மினி டிரான்ஸ்பார்மர் பொருத்தி குறைந்த மின்னழுத்தத்தை சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ