பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணியில் முரண்பாடு அமைச்சர் பெரியகருப்பன் கருத்து
திருப்புத்துார்: பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணியில் முரண்பாடுகள் உள்ளன. பா.ஜ.,தமிழகத்தில் கால் ஊன்றியதாக தெரியவில்லை என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.திருப்புத்துாரில் அவர் கூறியதாவது: பா.ஜ., 3 வது முறை ஆட்சிக்கு வந்தும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதா வெளிநாட்டிலுள்ள கருப்பு பணத்தை கண்டுபிடித்து குடிமகன்களில் வங்கிக் கணக்கிற்கு 15 லட்சம் வரவு வைப்பதாக பிரதமர் கூறினாரே நிறைவேற்றப்பட்டதா. தமிழகத்தில் பா.ஜ. காலுான்றியதாக கூறுகிறார்கள். 2001ல் தி.மு.க., தயவில் பா.ஜ.வில் 4 எம்.எல்.ஏ.க்கள் தேர்வானார்கள். அதில் வந்தவர் தான் எச்.ராஜா. 2021 லும் அதே நான்கு சீட்கள் தான். இதில் பா,ஜ.,எங்கு நன்றாக காலுான்றியுள்ளது.மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்ற சட்டசபை அ.தி.மு.க., துணைத் தலைவர் உதயகுமார், முன்னாள் அமைச்சர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் உள்ளே நடந்தது தெரியாது என்கிறார்கள். மாநாடு விளம்பரமே திராவிடத்தை வேரறுக்கும் மாநாடு என்கிற போது, அது கூட தெரியாது என்றால் யாரை ஏமாற்றுகிறார்கள். அந்த கூட்டணியில் பல முரண்பாடு உள்ளது. அமித்ஷா கூட்டணி மந்திரி சபை என்கிறார். பழனிசாமி பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி என்கிறார். அமித்ஷா சொல்லும் போது பழனிசாமி அருகில் தான் இருந்தார். இல்லை என்றால் மைக்கை வாங்கி சொல்லியிருக்கலாமே. பா.ஜ.வின் பிடியில் இருக்கிறார்கள்.தங்களுடைய, தங்கள் குடும்ப உறுப்பினர்களின் வழக்குகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள பழனிசாமி அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டார். உண்மையான அதிமுக உணர்வாளர்கள் பழனிசாமியின் நடவடிக்கைகளில் திருப்தியடையவில்லை.அடுத்த சட்டசபைத் தேர்தல் எங்களுக்கு பிரகாசமாக உள்ளது.