திருக்கார்த்திகைக்கு மண் சர விளக்குகள்: மண்ணின் தன்மைக்கு ஒரு பெருமை
தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை நாளன்று வீடுகள் மற்றும் கடைகள்,கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றி வைத்து, பெண்கள் கார்த்திகை பெண்களை வழிபாடு செய்வார்கள். கார்த்திகை விழா என்றாலே மானாமதுரை மண்ணில் தயாரிக்கப்பட்ட விளக்குகளுக்கு கிராக்கி அதிகம். அந்தவகையில் டிச.13ல் நடக்க உள்ள திருக்கார்த்திகை விழாவிற்காக மண்ணால் ஆன அகல் விளக்குகள், சர விளக்குகள், அணையா விளக்கு, துளசி மாடம், பெரிய கம்ப்யூட்டர் விளக்கு, குருவாயூர் ஸ்டாண்ட், 5 முக குருவாயூர் விளக்கு, நட்டு விளக்கு, 2 அடுக்கு குருவாயூர் விளக்கு, 2,3 அடுக்கு தீப விளக்குகள், 1 அடுக்கு 7 சிட்டி மற்றும் 5 சிட்டி விளக்குகள், அகல் விளக்குகள், தேங்காய் முக விளக்குகள், சாமி உருவ விளக்குகள் என பல்வேறு விதமான விளக்குகள் மானாமதுரையில் உள்ள மண்பாண்ட கூட்டுறவு சங்கம் மற்றும் தொழிலாளர்கள் வீடுகளில் தயாரித்து வருகின்றனர். வடமாநிலங்களுக்கு ஆர்டர் குவிந்துவருவதால், மானாமதுரையில் விளக்குகள் விற்பனை தற்போதிருந்தே சூடுபிடிக்க துவங்கிவிட்டது. ரூ. 5 முதல் 500 வரை விளக்குகள்
இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: மானாமதுரையில் சீசனுக்கு ஏற்ப மண்பாண்ட பொருட்கள் தயாரித்து, தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வருகிறோம். கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு இங்கு கார்த்திகை விளக்குகள் தயாரிப்பு மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. ரகத்திற்கு ஏற்ப ஒரு மண் விளக்கு ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.500 வரை விற்பனை செய்துவருகிறோம், என்றனர்.