மானாமதுரையில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு; நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை
மானாமதுரை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு தனியார் நிர்வாகம், முயற்சித்தது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் கடந்தஆண்டு மானாமதுரையில் துவக்கப்பட்டது. இங்கு மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை துவங்கினால், கழிவு மூலம் இப்பகுதி மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு, சுவாசம் மூலம் நோய் தொற்று ஏற்படும் அச்சம் இருப்பதாக கூறி, மானாமதுரை அருகே உள்ள சூரக்குளம் பில்லறுத்தான், கொன்னக்குளம், கல்குறிச்சி, உடைகுளம், சிப்காட் பகுதி மக்கள் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆலையே துவக்க கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில், அங்கு அதற்கான கட்டுமான பணிகள் தடையின்றி நடந்தது. இதற்கு சர்வ கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அப்போதிருந்த சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து தற்காலிகமாக மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமான பணிக்கு தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிலையில் கலெக்டர் ஆஷா அஜித் மாறுதலாகி சென்றுவிட்டதால், மீண்டும் ஆலை நிர்வாகம் கட்டுமான பணிகளை துவக்கியுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையை மானாமதுரையில் துவக்க கூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். கட்சியின் நிர்வாகி சண்முகப்பிரியா தலைமையில் செல்வகண்ணன் உள்ளிட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசார் முற்றுகையை நடத்தவிடாமல் தடுத்தனர். இதனால், மானாமதுரை தாசில்தார் மற்றும் சிப்காட் திட்ட அலுவலகம் முன் கண்டன கோஷங்களை எழுப்பினர்.