காரைக்குடியில் பயன்படாத ‛நம்ம டாய்லெட்
காரைக்குடி; காரைக்குடி கழனி வாசலில் மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட நம்ம டாய்லெட், பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. 2014ஆம் ஆண்டு திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கவும், அனைவரும் கழிப்பறைகளை பயன்படுத்தும் வகையிலும், நகராட்சி தோறும் நவீன வசதிகளுடன் கூடிய நம்ம டாய்லெட் திட்டம் தொடங்கப்பட்டது. ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட நம்ம டாய்லெட்டில் ஆண்,பெண்கள் என 6 கழிப்பறைகள், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய் தளத்துடன் கழிப்பறை அமைக்கப்பட்டன. நீண்ட நாள் உழைக்கக்கூடிய நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய பைபர் பிளாஸ்டிக்கினால் இந்த டாய்லெட் அமைக்கப்பட்டிருந்தது. காரைக்குடி கழனிவாசலில் நம்ம டாய்லெட் திட்டம் குடியிருப்புக்கு அருகே தொடங்கப்பட்டது. குறுகிய சாலையில் இட நெருக்கடியான இடத்தில் திட்டம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தாலும், பராமரிப்பின்றி பயன்படாமல் போனது. தற்போது செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி வருகிறது. நம்ம டாய்லெட் திட்ட கழிப்பறையை முறையாக பராமரிக்கவோ அல்லது அப்புறப்படுத்தவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.