மேலும் செய்திகள்
புதுக்கோட்டை அருகே விசிறி பாறை கல் கண்டுபிடிப்பு
28-Nov-2024
சிவகங்கை: ஆந்திரா, கர்நாடகா போன்று சிவகங்கை அருகே காளையார்கோவிலில் பெருங்கற்கால கட்டுமானம் இருப்பதால், இந்த இடத்தில் தொல்லியல் துறை ஆய்வு பணி செய்ய வேண்டும் என வானவியல்ஆய்வாளர் பாலபாரதி தெரிவித்தார். கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தை சேர்ந்த 50 உறுப்பினர்கள் காளையார்கோவில், அரண்மனை சிறுவயல், திருமலை, திருக்கோஷ்டியூர், இளையாத்தங்குடி, இரணியூர் ஆகிய கோயில்களில் கள ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து காளையார்கோவில் அருகே புரசடை உடைப்பு பகுதியில் பெருங்கற்கால கால கணக்குகளை காட்டும் நடுகற்கள் குறித்து வானவியல் ஆய்வாளர் ஆய்வு நடத்தினார். ஆய்வாளர் பாலபாரதி கூறியதாவது: காளையார்கோவில் அருகே புரசடைஉடைப்பு கிராமத்தில் பெருங்கற்கால மக்களின் ஈமக்காடு உள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் தொல் குடியிருப்புகள் அதிகளவில் அமைந்துள்ளன. பெருங்கற்கால, கருப்பு சிவப்பு பானை ஓட்டு பண்பாட்டுடன் இங்கு வாழ்ந்த மக்கள், தங்கள் முன்னோர்களை புதைத்து சடங்குகளை செய்யும் ஈமக்காட்டில் நெடுங்கற்களை நட்டு வைத்துள்ளனர்.இந்த கல் அமைப்பு சூரியனின் வட, தென் இயக்கங்களை தெரிந்து கொள்வதற்காகவே அக்கால மக்கள் உருவாக்கியுள்ளனர். இது போன்று வானவியல் தொடர்பான கற்கால கட்டுமானங்கள் ஆந்திரா, கர்நாடகாவிலும் கிடைக்கின்றன. அதற்கு ஈடாக சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் கற்கால கட்டுமானங்கள் உள்ளன. புரசடை உடைப்பு பகுதியில் ஆய்வு செய்ததில் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு, ஒரு கருப்பு நிற முதுமக்கள் தாழி, கருப்பு, சிவப்பு நிற மண்பாண்டங்கள் தென்பட்டன. இந்த இடத்தில் முறையான தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு பெருங்கற்கால நாகரிகத்தை அறிந்து கொள்ளலாம், என்றார். இந்த ஆய்வில் கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்க தலைவர் ஏ.கோபிநாத் தலைமை வகித்தார். புரசடை உடைப்பு திறந்த வெளி சிறை கண்காணிப்பாளர் அருண்ராஜ், வரலாற்று ஆய்வாளர்கள் ரமேஷ், சுரேந்திரன் பங்கேற்றனர். இது தவிர இக்குழுவினர் காரைக்குடி, திருக்கோளக்குடி, பூலாங்குறிச்சியில் உள்ள நகரத்தார் கோயில்களை பார்வையிட்டு, அதன் வரலாற்றை அறிந்து செல்லும் ஆய்வினை மேற்கொண்டனர்.
28-Nov-2024