ஆக்கிரமிப்பில் இருந்து ரயில்வே இடங்களை காக்க புதிய முயற்சி... கான்கிரீட் ஸ்லீப்பர் கட்டைகள் மூலம் தடுப்புச்சுவர்
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான அகலரயில் பாதையை ஒட்டி சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி என ஏராளமான கிராமங்கள் உள்ளன. மேலும் இந்த கிராமங்களை ஒட்டி புதுப்புது குடியிருப்புகளும் உருவாகி வருகின்றன. மதுரை - - ராமேஸ்வரம் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் அளவிற்கு ரயில்வேக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு உரிய பாதுகாப்பின்றி பலரும் சிறிது சிறிதாக ஆக்கிரமிக்க முயற்சித்து வருகின்றனர். இதனை தடுக்க வேலி, சுற்றுச்சுவர் அமைத்தாலும் பயனில்லை. மேலும் குடியிருப்பு பகுதியில் தண்டவாளங்களை பலரும் குறுக்கு பாதையாக பயன்படுத்துகின்றனர். இதனை தடுக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திருப்புவனத்தில் ரயில் பாதையை ஒட்டி கான்கிரீட் ஸ்லீப்பர் கட்டைகளை பயன்படுத்தி சுற்றுச்சுவர் எழுப்பி வருகிறது. அகல ரயில் பாதை பணிக்காக தயாரிக்கப்பட்ட கான்கிரீட் ஸ்லீப்பர் கட்டைகள் மூலம் சுற்றுச்சுவர் எழுப்பி வருகின்றனர். சிமிண்ட், செங்கல் சுற்றுச்சுவரை காட்டிலும் இந்த சுற்றுச்சுவர் எளிதில் சேதமடையாமலும் உறுதியாகவும் உள்ளது. ரயில்வே ஊழியர்கள் கூறியதாவது, தண்டவாளங்களை கடப்பது சட்டப்படி குற்றம். இருப்பினும் திருப்புவனம் பழையூர் ராகவேந்திரா நகரில் பள்ளிகளுக்கு செல்லவும், பஸ்சுக்கு செல்வதற்காக மக்கள் தண்டவாளத்தை கடக்கின்றனர். இதனை தடுக்கும் விதமாகவே சுற்றுச்சுவர் அமைத்து வருகிறோம் என்றனர்.