உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நுாறு நாள் வேலை திட்டத்தில் மூன்று மாதமாக சம்பளம் இல்லை

நுாறு நாள் வேலை திட்டத்தில் மூன்று மாதமாக சம்பளம் இல்லை

இளையான்குடி: நுாறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படாததோடு, பொருட்களை சப்ளை செய்த கான்ட்ராக்டர்களுக்கும் தொகை வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி,மானாமதுரை ஒன்றியங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் ரோடு,கட்டடங்கள்,இ சேவை மையங்கள், கழிவுநீர் வாய்க்கால்,சிறு பாலங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கிறது. அந்தந்த ஊராட்சி செயலாளர்களுக்கு பணியாணை (ஒர்க் ஆர்டர்) வழங்கப்பட்டு அவர்களின் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் பணிகள் நடைபெற ஜல்லிக்கற்கள், சிமென்ட்,கம்பி உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்த ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.60 கோடிக்கும் மேல் கடந்த ஒரு வருடமாக வழங்காமல் இழுத்தடித்து வருவதாக ஒப்பந்ததாரர்கள் புலம்புகின்றனர். இதே போன்று ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிகளை செய்த கிராம மக்களுக்கும் 3 மாதமாக சம்பளம் வழங்காததால் அவர்களும் சிரமப்படுகின்றனர். கட்டுமான பொருட்கள் சப்ளை செய்த ஒப்பந்ததாரர்கள் சங்க மாவட்ட நிர்வாகி சந்திரசேகர் கூறிய தாவது: கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வேலை முடித்த பிறகு அதற்கான நிதியை உடனடியாக விடுவித்து வந்தனர். 2 வருடங்களாக நிதி பற்றாக்குறையை காரணமாக கூறி உரிய நேரத்தில் நிதியை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். கடந்த ஆண்டாவது தீபாவளியை யொட்டி சிறிதளவு நிதியை ஒதுக்கி வழங்கினர். ஆனால் இந்த ஆண்டு அதுவும் ஒதுக்காத நிலை உள்ளது என்றார். மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அலுவலக அதிகாரி கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்திற்கு வழங்கப்படாமல் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நிலுவையில் உள்ள நிதி வழங்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை