மதிப்பு கூட்டப்படாத விதை நெல் விவசாயிகள் தவிப்பு
திருப்புவனம்: திருப்புவனம் தாலுகாவில் மதிப்பு கூட்டப்படாத விதை நெல்லால் களைகள் அதிகளவு பெருகி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு நடந்து வருகின்றன. என்.எல்.ஆர்., ஆர்.என்.ஆர்., கோ.50, கோ.51 உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. திருப்புவனம் வேளாண் துறை மூலம் 50 டன் வரை விதை நெல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர விவசாயிகள் சொந்தமாகவும் விதை நெல் வைத்தும் தனியார் வியாபாரிகளிடம் விதை நெல் வாங்கியும் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வேளாண் துறை மூலம் வழங்கப்பட்ட விதை நெல் மதிப்பு கூட்டப்படாததாலும் சுத்திகரிக்கப்படாததாலும் களைகள் அதிகளவில் முளைத்துள்ளன. களைகொல்லி தெளித்தும் களைகள் கட்டுப்படுத்த முடியவில்லை.திருப்பாச்சேத்தி விவசாயி பிச்சை கூறுகையில் :வேளாண் துறை மூலம் வாங்கிய விதை நெல்லை ஐந்து ஏக்கரில் பயிரிட்டுள்ளேன். நெல் நாற்றுகள் ஒரு அடி தூரம் வளர்ந்த பின் அதனுடன் களைகளும் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்த களைகள் நெற்பயிர்களை வளரவிடாமல் செய்து வருகின்றன. இதனால் விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. களைகொல்லி பயன்படுத்தியும் கட்டுப்படவில்லை, என்றார்.முல்லைப்பெரியாறு வைகை பூர்வீக பாசன சங்க பொதுச்செயலாளர் ஆதிமூலம் கூறுகையில் : வேளாண் துறை விவசாயிகளிடம் இருந்து விதை நெல்லை கொள்முதல் செய்து அதனை இருப்பு வைத்து மதிப்பு கூட்டி சுத்திகரித்து விநியோகம் செய்ய வேண்டும், சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்புவனத்தில் விதை நெல் சுத்திகரிப்பு மையம் உள்ளது. மற்ற பகுதிகளில் தனியாரிடம் சுத்திகரித்து வாங்கி விநியோகம் செய்கின்றனர். ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் அரசு விதை நெல் சுத்திகரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விதை நெல்லை இருப்பு வைத்து மதிப்பு கூட்டாமல் வாங்கிய இரு மாதங்களில் அப்படியே விவசாயிகளுக்கு விநியோகித்து விட்டனர். மதிப்பு கூட்டப்படாததாலும், சுத்திகரிக்கப்படாததாலும் களைகள் அதிகளவில் வளர்ந்து விவசாயத்தை பாதித்துள்ளன. வரும் காலங்களில் வேளாண் துறையினர் விதை நெல்லை சுத்திகரித்து மதிப்பு கூட்டி இருப்பு வைத்து விநியோகம் செய்ய வேண்டும், என்றார்.