திருப்புவனம் : திருப்புவனத்தில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் அரிவாள், கோடாரி, கத்தி, மண்வெட்டி போன்ற விவசாய கருவிகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.தென் மாவட்டங்களில் விவசாய கருவிகள் தயாரிப்பில் முன்னணியில் இருப்பது திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதி தான்.இங்கு தயாராகும் அரிவாள், கத்தி, கடப்பாரை, மண்வெட்டி, கோடாரி போன்ற விவசாய கருவிகள் தமிழகம் முழுவதும் விற்பனையாகின்றன. திருப்பாச்சி அருவா என சினிமா துறைகளிலும் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களின் சேதமடைந்த இரும்பு பட்டைகளை மதுரை மார்க்கெட்டில் வாங்கி தேவைக்கு ஏற்ற அளவில் வெட்டி அருவா, கத்தி உள்ளிட்டவைகள் தயாரிக்கின்றனர்.திருப்பாச்சேத்தியை பூர்வீகமாக கொண்ட தொழிலாளர்களின் அரிவாள் அடிக்கும் தொழில் நேர்த்தி தான் தரமான அரிவாளாக உருவாகிறது. மற்ற பகுதிகளில் தயாரிக்கும் அருவா வை காட்டிலும் திருப்பாச்சேத்தி அரிவாளின் எடை மிகவும் லேசாகவும், கூர்மையாகவும் இருக்கும், மேலும் அருவாவின் கூர்மை மழுங்கினாலும் மீண்டும் மீண்டும் கூர் தீட்டி பயன்படுத்த முடியும், திருப்பாச்சேத்தி அருவா வை பயன்படுத்தி விவசாயிகள் கருவேல மரங்கள் உள்ளிட்ட மரங்களை வெட்ட அதிகளவு பயன்படுத்துகின்றனர். நாள் முழுவதும் பயன்படுத்த திருப்பாச்சேத்தி அருவா தான் பயனுள்ளதாக இருக்கும். கடந்த சில நாட்களாக வாரச்சந்தை நடைபெறும் நாட்களில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பழையனுார் உள்ளிட்ட பகுதிகளில் மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் அரிவாள், கத்தி, கோடாரி உள்ளிட்டவற்றை தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். திருப்பாச்சேத்தி அரிவாள் தயாரிக்கும் தொழிலாளி முனியப்பன் கூறுகையில்: இரும்பு உருக்கில் நாங்கள் அருவா தயாரிக்கின்றோம், இந்த வகை அரிவாள் தயாரிக்க குறைந்த பட்சம் 8 முதல் பத்து முறை நெருப்பில் இட்டு அடிக்க வேண்டும், அப்போதுதான் எடை குறைவாகவும் கூர்மையாகவும் வரும், பத்து வருடம் வரை உழைக்கும், வடமாநில தொழிலாளர்கள் இரும்பில் தயாரித்து விற்பனை செய்கின்றனர். விரைவில் அதனுடைய கூர்மையை இழந்துவிடும், ஒரு முறை பயன்படுத்தி விட்டு துாக்கி வீசப்படும் பேப்பர் கப் போன்றது தான் அந்த வகை அரிவாள், அதனால் தான் விலை குறைத்து தருகின்றனர். நம்முடைய பகுதியில் கருவேல மரங்கள் வெட்டுவதற்குதான் அதிகளவு அரிவாள் வாங்கிச் செல்கின்றனர். திருப்பாச்சேத்தி அருவாவின் விலை குறைந்த பட்சம் 400 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை இருக்கும், என்றார்.