வெட்டப்படும் சாலையோர மரங்கள் வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்
திருப்புவனம்: திருப்புவனத்தில் பலரும் தங்களது வீடு, வணிக வளாகங்களை மறைப்பதாக கருதி சாலையோர மரங்களை வேருடன் அகற்றி வருவதை அதிகாரிகள் கண்டும் காணாதது போல செல்வதால் மரங்கள் மாயமாகி வருகிறது.பூமி வெப்பமயமாகி வருவதை தடுக்க மரங்கள் நட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் திருப்புவனம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. அதிகாரிகளிடம் புகார் செய்தால் மரங்கள் வெட்டி முடித்தபின் பார்வையிட வருவதுடன் மரங்களை வெட்டியவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. கோர்ட் உத்தரவுப்படி சாலையோர மரங்கள் அகற்றப்பட்டால் ஒரு மரத்திற்கு பதில் நான்கு மரங்கள் நடவேண்டும் என உத்தரவிடப்பட்டது.திருப்புவனத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரங்களை பலரும் சுயநலன் கருதி வெட்டி வருகின்றனர். மடப்புரம் விலக்கில் மரம் வெட்டியது குறித்து நெடுஞ்சாலைத்துறைக்கு அப்பகுதி மக்கள் புகார் செய்த போது அதிகாரிகள் யாரும் வரவில்லை. ஏற்கனவே திருப்புவனம் தாலுகா அலுவலகம், செல்லப்பனேந்தல் விலக்கு, பாப்பாங்குளம் விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலரும் மரங்களை வேருடன் வெட்டி அகற்றி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் திருப்புவனம் பகுதியில் பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டும்.