மேலும் செய்திகள்
மக்களை கண்ணீர் சிந்த வைக்கும் கரூர் சுரங்கப்பாதை
04-Apr-2025
பழையனூர்: பழையனூர் -- சம்பட்டிமடை கிராமம் இடையே ரோடு பணிகள் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக கிடப்பில் உள்ளதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பழையனூர் அருகே உள்ளது சம்பட்டிமடை கிராமம். இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பள்ளி செல்லும் மாணவர்கள், விவசாயிகள் பொருட்கள் வாங்க பழையனூர் கண்மாய் கரை வழியாக தான் வந்து செல்கின்றனர். மழை காலங்களில் கண்மாய் கரை சேறும் சகதியுமாக மாறி விடுவதால் 7 கி.மீ., துாரம் சுற்றி பழையனுார் செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. கண்மாய் கரையில் சாலை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து 2021 ம் ஆண்டில் வேலை உறுதி திட்ட நிதி ரூ.30 லட்சத்தில் ரோடு அமைக்க முடிவு செய்தனர். இங்கு ரோடுபோட பொதுப்பணித்துறையினர் தடையின்மை சான்று வழங்க வில்லை. இதனால் ரோட்டிற்காக ஒதுக்கிய நிதியை திரும்ப பெற்று விட்டனர். கிராம மக்களின் போராட்டத்தை அடுத்து 2024ம் ஆண்டு அக்டோபரில் மீண்டும் ரோடு அமைக்க, தடையின்மை சான்றுக்காக பொதுப்பணித்துறைக்கு ரூ.30 ஆயிரம் கட்டணம் செலுத்தி, அனுமதி பெற்றனர். ஆனால், இது வரை ரோடு போடும் பணிகள் நடைபெறவில்லை. 4 ஆண்டு பணி செய்யாததால், திட்ட மதிப்பீடு உயர்ந்துவிட்டதால், புதிய திட்டமதிப்பீடு தயார் செய்த பின் தான் ரோடு பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பழையனுார் சென்று வருவதில் சம்பட்டிமடை கிராம மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
04-Apr-2025