சிவகங்கையில் அலுவலகம் மட்டுமே அனைத்து பணியாளர் இடமும் காலி வளர்ச்சி பணிகள் கடும் பாதிப்பு
சிவகங்கை: சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் துாய்மை பணி, பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.சிவகங்கை நகராட்சியில் 2 சுகாதார ஆய்வாளர் பணியிடம் உள்ளது. இதில் ஒருவர் மட்டுமே பணியில் இருந்தார்.அவரும் நீண்ட விடுமுறையில் சென்றுவிட்டார். சுகாதார அலுவலர் இந்த மாதம் பணி மாறுதலில் செல்கிறார். இதனால் பிறப்பு இறப்பு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. நகராட்சியில் துாய்மை சார்ந்த பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.வரி வசூல் செய்ய 5 வரி வசூலர் பணியிடம் உண்டு. 3 பணியிடங்கள் காலியாக உள்ளது. நகராட்சி மேலாளர் பணியிடம், இளநிலை உதவியாளர் பணியிடம் 2, இன்ஜினியர் பிரிவில் கண்காணிப்பாளர் பணியிடம், நகரமைப்பு இன்ஸ்பெக்டர் பணியிடம் என அனைத்தும் காலியாக உள்ளது. மேலும் சுகாதார மேற்பார்வையாளர் 2 பணியிடமும் காலியாக உள்ளது. சிவகங்கை நகராட்சியில் அனைத்து நிர்வாக பணிகளும் தேக்கம் அடைந்துள்ளதாக கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர்.