| ADDED : நவ 05, 2025 03:31 AM
திருப்புவனம்: ''தமிழகத்தில் குற்றவாளிகள் மீது ஒரே நேரத்தில் போலீசார் பெரிய அளவில் 'ஆப்பரேஷன்' நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, திருப்புவனத்தில் காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார். திருப்புவனம் அரசு மருத்துவமனையில் ரூ.63 லட்சம் செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய பிரேத பரிசோதனை கூட கட்டடம் ராஜ்யசபா எம்.பி., சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. தலைமை டாக்டர் ஸ்ரீவித்யா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., தமிழரசி, பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அடிக்கல் நாட்டி கார்த்தி எம்.பி., கூறியதாவது: கோவை மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில் போலீசார் சாப்ட்டாக உள்ளனர். இனி அப்படி இருக்க கூடாது. ரவுடிகள் லிஸ்ட் எடுத்து அவர்களை கண்காணிக்க வேண்டும். பெரிய அளவில் தமிழகத்தில் ஒரே நேரத்தில் போலீசார் குற்றவாளிகள் மீது பெரிய அளவில் ஆப்பரேஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும், கூலிப்படைகளை கட்டுப்படுத்த வேண்டும். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பல மாநிலங்களில் முறையாக நடக்கவில்லை. எனவே தான் தேர்தல் கமிஷன் மீது சந்தேகம் ஏற்படுகிறது. வாக்காளர் பட்டியல் சீர் திருத்தம் முறையாக நடக்க வேண்டும் என்றார்.