புதுவயல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு: மக்கள் கலெக்டரிடம் புகார் மக்கள் கலெக்டரிடம் புகார்
சிவகங்கை: புதுவயல் பேரூராட்சியில் அம்ரூத் -2.0 திட்டத்தின் கீழ் ரூ.5.40 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.புதுவயல் பேரூராட்சியில் 7,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, நுாற்றுக்கணக்கான அரிசி ஆலைகள் செயல்படுகின்றன. வீடுகள், வணிக நிறுவனம், அரிசி ஆலைகளில் சேகரமாகும் கழிவு, கசடு நீரை சேகரித்து, சுத்திகரிப்பு செய்யும் அம்ரூத் 2.0 திட்டம் அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் பேரூராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கரில் ரூ.5.40 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிதி, பணி ஆணை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் பரிட்சார்த்தமாக வார்டு எண் 10 முதல் 13 வரை உள்ள 4 வார்டுகளில் உள்ள 2000 வீடுகள், வணிக நிறுவனம், அரிசி ஆலைகளில் சேகரமாகும் கழிவு, கசடுகளை சேகரிக்க, வார்டுக்கு ஒரு கழிவுநீர் சேகரிப்பு நிலையம் கட்டப்பட உள்ளது. அக்கழிவு நீர் சேகரிப்பு நிலையத்தில் சேகரமாகும் கழிவுநீர் பம்பிங் செய்து, 5 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்லப்படும். பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் சுகாதாரக்கேடு ஏற்படும். எனவே அரசு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி புதுவயல் பேரூராட்சி மக்கள் கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.புதுவயல் மாதர் சங்க நிர்வாகி எம்.குணசுந்தரி கூறியதாவது: கோயில், தெப்பக்குளம் அருகே பேரூராட்சி நிர்வாகம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், திருவிழா காலங்களில் தேரோட்டம் நடத்துதல், அன்னதானம் வழங்குவது போன்ற பணிகளில் பாதிப்பு ஏற்படும். மேலும், கழிவு நீரால் கொசுக்கள் உருவாகி அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அச்சம் நிலவுகிறது. இதனால், அரசு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத இடத்திற்கு இத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம் என்றார். பாதிப்பு இல்லா திட்டம்
புதுவயல் பேரூராட்சி செயல் அலுவலர் உமாமகேஸ்வரன் கூறியதாவது: கடந்த 2013 ல் கழிவு, கசடு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. கோயில், தெப்பக்குளத்தில் இருந்து 1 கி.மீ., துாரத்திற்கு அப்பால் தான், சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளது. இதனால், எந்தவித பாதிப்பும் இருக்காது. கழிவுநீர் கொண்டு வரும் திட்டம் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயல்படுத்தப்படும், என்றார்.