உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டவுன் பஸ்களாக மாற்றப்படும் காலாவதி பஸ்கள் கிராமத்து பயணிகள் அவதி

டவுன் பஸ்களாக மாற்றப்படும் காலாவதி பஸ்கள் கிராமத்து பயணிகள் அவதி

திருப்புவனம்: காலாவதியான தொலைதுார பஸ்களை டவுன் பஸ்களாக மாற்றி திருப்புவனம் பகுதியில் இயக்கப்படுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்டத்தின் கிளை பணிமனை திருப்புவனத்தில் 42 டவுன் பஸ்களுடன் இயங்கி வருகிறது. திருப்புவனத்தை மையமாக வைத்து சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன.பெரும்பாலான கிராமங்களுக்கு இரண்டு முதல் ஐந்து முறை வரை சென்று வரும் வகையில் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான டவுன் பஸ்கள் போதிய பராமரிப்பின்றி இயக்கப்படுகின்றன.முகப்பு விளக்கு எரியாததால் இரவு நேரங்களில் கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை என கிராமமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.42 டவுன் பஸ்களில் 32 பஸ்கள் மட்டுமே ஓரளவிற்கு இயங்கும் நிலையில் உள்ளது. திருப்புவனம் கிளை பணிமனைக்கு 20 வருடங்களுக்கும் மேலாக புதிய டவுன் பஸ்கள் வழங்கப்படவில்லை. கடந்த மாதம் திருப்புவனம் பணிமனைக்கு ஒரு புதிய டவுன் பஸ்சும், மேலுார் பணி மனைக்கு ஒரு புதிய டவுன் பஸ்சும் வழங்கப்பட்டு திருப்புவனம் - மேலுார் இடையே இயக்கப்பட்டு வருகின்றன.திருப்புவனத்தில் இருந்து மதுரைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் சென்று வரும் நிலையில் மதுரைக்கு புதிய பஸ்கள் இயக்கப்படாமல் மற்ற பணிமனைகளில் தொலை துாரங்களுக்கு இயக்கப்பட்டு பழுதான பஸ்களை டவுன் பஸ்களாக மாற்றி இயக்குகின்றனர்.இந்த பஸ்களில் சீட் மிகவும் நெருக்கமாக இருப்பதுடன் பஸ்சில் டிக்கெட் வழங்க கண்டக்டர் சென்று வர முடியாத நிலை உள்ளது. மேலும் காற்றோட்டமே இல்லாத பஸ்களில் பயணம் செய்யவே முடியவில்லை. பஸ்களில் ஏறி, இறங்கவும் சிரமமாக உள்ளது. திருப்புவனத்தில் இருந்து மதுரை வரை 32 பஸ் ஸ்டாப் உள்ளன. இவற்றில் அனைத்திலும் நின்று செல்ல வேண்டி உள்ளது. பழுதான பஸ்களால் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக டிரைவர்கள் புலம்புகின்றனர்.டிரைவர்கள் கூறுகையில்: பணிமனையில் 42 பஸ்கள் இருப்பதாக கூறப்பட்டாலும் வரும் ஆகஸ்டில் 15 பஸ்களும் செப்டம்பரில் ஐந்து பஸ்களும் காலாவதியாகின்றன. இனி அந்த பஸ்களை இயக்கவே முடியாது. இதனால் பணிமனையில் பஸ்களின் எண்ணிக்கை பாதியாக குறைய வாய்ப்புள்ளது, என்றனர். போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில்: ஆகஸ்ட், செப்டம்பரில் பஸ்கள் காலாவதியாகிறது என்பது உண்மை தான். சமீபத்தில் திருப்புவனம் பணிமனைக்கு ஒரே ஒரு டவுன் பஸ் வழங்கப்பட்டது. விரைவில் 20 பஸ்கள் வழங்கப்பட உள்ளன, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை