திருப்புவனத்தில் நெல் விளைச்சல் குறைவு
திருப்புவனம்: இந்தாண்டும் பொங்கல் திருநாளுக்கு புது அரிசி வைத்து பொங்கல் கொண்டாட வாய்ப்பில்லை என திருப்புவனம் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் செப்.,ல் தொடங்கும் வடகிழக்கு பருவ மழையை நம்பி வைகை ஆற்றை ஒட்டியுள்ள திருப்புவனம், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், மடப்புரம், கீழடி உள்ளிட்ட பகுதிகளில் 8,000 ஏக்கரில் ஆர்.என்.ஆர்., என்.எல்.ஆர்., கோ50, கோ51, கல்சர் பொன்னி, கருப்பு கவுனி உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்படும் காலம் பருவத்திற்கு நடவு செய்ய வசதியாக விவசாயிகள் ஆக., முதல் வாரத்திலேயே நாற்றங்கால் அமைக்க தொடங்கு வார்கள். ஆறுகள் பாயும் திருப்புவனம் வட்டாரத்தில் நாற்றங்கால் அமைத்து அதன்பின் நாற்று பறித்து நடவு செய்வது வழக்கம். இதற்காக வயல் வெளிகளின் ஒரு பகுதியில் நாற்றங்கால் அமைப்பார்கள். ஆக.,ல் கிணறு வைத்துள்ள விவசாயிகளிடம் தண்ணீர் வாங்கி நாற்றங்கால் அமைத்து நாற்று வளர்த்துவிடுவார்கள். செப.,ல் மழை தொடங்கிய பின் நிலத்தை உழவு செய்து நாற்று பறித்து நடவு செய்வார்கள். மேலும் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படுவதால் கண்மாய்களில் மழை தண்ணீருடன் வைகை தண்ணீரும் சேர்ந்து விளைச்சல் முழு அளவில் இருக்கும். கடந்த 2022 மற்றும் 2023ல் இரு ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை தவறாது பெய்ததால் நெல் விளைச்சல் அதிகமாக இருந்தது. எனவே ஜன.,ல் பொங்கல் திருநாளில் புது பானையில் புது அரிசி வைத்து பொங்கல் கொண்டாடினர். இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அக்., ல் தான் பெய்தது. அதிலும் போதுமான அளவு பெய்யவே இல்லை. இதனால் நெல்நடவு பணிகள் தொடங்கப்படவே இல்லை. திருப்புவனம் தாலுகாவில் வேளாண் துறை மூலம் 60 டன் விதை நெல் விநியோகம் செய்யப்பட்டது. மழை இல்லாதததால் பெரும்பாலான விவசாயிகள் நடவு பணிகளை தாமதமாக தொடங்கினர். வைகை அணையிலும் நவ., மாதம்தான் தண்ணீர் திறக்கப்பட்டது. கண்மாய்களுக்கும் அதன்பின் தான் தண்ணீர் வந்தது. திருப்புவனம் வட்டாரத்தில் மாரநாடு, பிரமனூர் உள்ளிட்ட ஒருசில கண்மாய்களில் மட்டும் தண்ணீர் உள்ளது. திருப்புவனம் வட்டாரத்தில் 100 மற்றும் 120 நாள் பயிர்களை தான் விவசாயிகள் நடவு செய்வார்கள். இந்த மாதம் தான் விவசாயிகள் நெல் நடவு பணிகளை தொடங்கி யுள்ளனர். எனவே மார்ச், ஏப்ரலில் தான் அறுவடை தொடங்கும். இதனால் பொங்கலுக்கு புது அரிசி இட்டு புது பானையில் பொங்கல் வைக்க வாய்ப்பில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.