மாணவிக்கு கட்டாய மாற்று சான்று வழங்கல் பெற்றோர் புகார்
சிவகங்கை: தேவகோட்டை துாய மரியன்னை மகளிர் மேல்நிலை பள்ளியில் தன் மகளுக்கு கட்டாயப்படுத்தி மாற்று சான்று வழங்கிவிட்டதாக கூறி மாணவியின் தாய் சிவகங்கை சி.இ.ஓ., அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.காரைக்குடி சூடாமணிபுரம் 4 வது வீதி அமிர்தராஜா. இவரது மனைவி விமல். இவர்களது மகள் தேவகோட்டை துாய மரியன்னை மகளிர் மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார்.குடும்ப சூழ்நிலை காரணமாக 9 ம்வகுப்பு முழு ஆண்டு தேர்வை எழுத முடியவில்லை. 2025 ஏப்., 24ம் தேதி பள்ளிக்கு சென்ற விமல், தன் மகள் தேர்வுக்கு வர முடியாததற்கு குடும்ப சூழல் குறித்து விளக்கினார். தலைமை ஆசிரியர் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்று, என் மகளுக்கு மாற்று சான்று (டிஸ்கன்டினியூ) வழங்கி விட்டதாகவும், மகளை ஜூன் மறுதேர்வில் பங்கேற்க செய்ய வேண்டும் என கூறியும், பள்ளியில் கட்டாயப்படுத்தி மாற்று சான்று வழங்கவிட்டதாக கூறி முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளார்.சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்துவிடம் புகார் அளிக்க வந்தார். அவர் அலுவலகத்தில் இல்லாததால், வாசல் முன் தர்ணாவில் ஈடுபட்டார். தானாக மாற்று சான்று வாங்கினர்
தேவகோட்டை துாய மரியன்னை மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை சார்லஸ் மேரி கூறியதாவது: அம்மாணவி 213 வேலை நாளுக்கு 54 நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வந்தார். நன்றாக படிக்கும் மாணவி தான். முழு ஆண்டு தேர்வுக்கு வரவில்லை.இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவிக்க போனில் பல முறை அழைத்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. 2025 ஏப்., 24ம் தேதி நேரடியாக பள்ளிக்கு வந்த மாணவி, அவரது அம்மா இருவரும் கையெழுத்திட்டு தான் மாற்று சான்று வாங்கி சென்றனர். நாங்களாக எந்தவித வற்புறுத்தலும் செய்யவில்லை என்றார்.