மானாமதுரை தர்மமுனீஸ்வரர் கோயிலில் பரிகார பூஜை
மானாமதுரை : மானாமதுரை அருகே சந்திரனேந்தல் தர்ம முனீஸ்வரர் கோயில் பகுதியில் கடந்த 5 தலைமுறைகளாக நடக்காத திருட்டு நடந்ததால், கிராமத்தினர் கோயிலில் பரிகார பூஜை செய்தனர். சந்திரனேந்தல் கண்மாய் கரையில் தர்ம முனீஸ்வரர் கோயில் உடை மரத்திற்கு அடியில் உள்ளது. இக்கோயிலில் ஆவணி மாத திருவிழா நடைபெறும். தினமும் இக்கோயிலில் சந்திரனேந்தல், புளிச்சிகுளம், குருந்தங்குளம், செய்களத்தூர் கிராமத்தினர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் இக்கோயிலில் சுவாமிக்கு பூஜைகளை செய்த பிறகே தங்களது விவசாய பணிகளை துவக்குகின்றனர்.இக்கோயில் கடந்த 5 தலைமுறைகளாக மக்கள் எந்த பொருளையாவது மறந்து வைத்துவிட்டு சென்றாலும் அவர்கள் திரும்பி எத்தனை நாள் கழித்து வந்தாலும் அப்பொருள் வைத்த இடத்திலேயே அப்படியே இருக்கும் என்பதால் இப்பகுதியில் திருட்டு பயம் இல்லாமல் இருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு கோயிலில் பித்தளை, வெண்கல மணிகளை கட்டி நேர்த்தி செலுத்துவர். கடந்த 2 நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் கோயிலில் கட்டியிருந்த 50-க்கும் மேற்பட்ட மணிகளை திருடி சென்றனர். கிராமத்தினர் சிப்காட் போலீசில் புகார் அளித்துள்ளனர்.கடந்த 5 தலைமுறையாக இங்கு திருட்டு நடக்காத நிலையில், தற்போது கோயில் மணி திருடுபோனதால் பரிகார பூஜைகளை செய்தனர்.