கட்சி ஓட்டுச்சாவடி ஏஜன்ட்கள் தினமும் 50 படிவம் பெற்று தரலாம்
சிவகங்கை: சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தினமும் 50 பூர்த்தி செய்த படிவங்களை வாக்காளர்களிடம் பெற்று ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்கள் வீடுகள் தோறும் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு துணையாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஏஜன்ட்களும் தங்களது பங்களிப்பை வழங்கலாம் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முன்பு வரை கட்சி ஓட்டுச்சாவடி ஏஜன்ட்கள் நாள் ஒன்றுக்கு 50 படிவங்கள் வரை வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்து பெற்று வழங்கலாம். அவ்வாறு படிவங்கள் சமர்பிக்கும் போது, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தன்னால் சரிபார்க்கப்பட்டு, திருப்தி அடையப்பட்டது என உறுதிமொழி வழங்க வேண்டும். அந்த உறுதிமொழியில், என்னால் வழங்கப்படும் இந்த தகவல்கள் அனைத்தும் என் பாகத்திற்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் உடன் சரிபார்க்கப்பட்டது என உறுதி அளிக்கிறேன் எனவும், மேலும் தவறான தகவல்கள் அளிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 பிரிவு 31 ன் படி தண்டனைக்கு உரியது என்பதையும் அறிவேன் என இருக்க வேண்டும். இவ்வாறு பெறப்படும் கணக்கீட்டு படிவங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் சரிபார்த்து அவற்றை டிஜிட்டல் வடிவமாக தொடர்புடைய உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அலுவலருக்கு சமர்பிப்பார். அவர் அப்படிவங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.