மடப்புரத்தில் பாலிதீன் கழிவு எரிப்பு சுகாதாரக்கேட்டால் மக்கள் பாதிப்பு
திருப்புவனம் : திருப்புவனம் அருகே மடப்புரம் ஊராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பை, பாலிதீன் கழிவுகளை வைகை ஆற்றிற்குள் கொட்டி எரிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மடப்புரம் ஊராட்சியில் மடப்புரம், வடகரை, எம்.ஜி.ஆர். நகர், கலுங்குப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் மடப்புரத்தில் மட்டும் தூய்மை பணியாளர்கள் மூலம் தினசரி குப்பை சேகரிக்கின்றனர். மடப்புரத்தில் உள்ள கடைகளில் இருந்து தினசரி ஏராளமான பிளாஸ்டிக் பை, டம்ளர், பேப்பர் உள்ளிட்டவைகளை சேகரித்து வந்து வைகை ஆற்றினுள் கொட்டுகின்றனர். சாதாரண நாட்களிலேயே ஏராளமான குப்பை சேகரிக்கப்படும், தற்போது ஆடி சீசன் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில் குப்பை ஏராளமாக சேகரிக்கப்படுகின்றன. இதுதவிர மடப்புரத்தில் திருமண மகால்கள், மண்டபங்கள், அறைகளில் தங்கும் பக்தர்கள் பயன் படுத்திய பிளாஸ்டிக் கழிவுகளும் ஏராளமாக சேகரிக்கப்படுகின்றன. இவற்றை தரம் பிரித்து அழிக்காமல் அப் படியே அங்காடி மங்கலம் ரோடு திரும்பும் இடத்தில் கொட்டி வருகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப் பாதையை கடந்து சென்று வரும் நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு வைக்கப்படும் தீயால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் புகை மேலே செல்லாமல் அடர்த்தியாக நிற்பதால் சாலை சரிவர தெரியாமல் விபத்துகள் நேரிட்டு வருகின்றன. குப்பை எரிக்கும் இடத்தின் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் அரசு பள்ளியும் செயல்பட்டு வருகிறது. புகை மூட்டத்தால் ஜன்னல் கதவுகளை திறக்காமல் வகுப்பு நடந்து வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் மடப்புரம் ஊராட்சி யில் குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுத்து நிறுத்தி குப்பைகளை தரம் பிரித்து அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.