மானாமதுரையில் சமுதாய கூடமின்றி மக்கள் அவதி
மானாமதுரை : மானாமதுரையில் சமுதாயக்கூடம் இல்லாத காரணத்தினால் குறைந்த செலவில் சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மானாமதுரை பேரூராட்சியாக இருந்தபோது கீழ்கரை பகுதியில் எம்.எல்.ஏ., அலுவலகம் பின்புறமும், மேல்கரையில் பழைய பஸ் ஸ்டாண்ட் வளாக பகுதியிலும் சமுதாய கூடங்கள் செயல்பட்டு வந்தன. இதனால் மானாமதுரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குறைந்த செலவிலேயே இல்ல நிகழ்ச்சிகளை நடத்தினர். கீழ்கரை பகுதியில் செயல்பட்டு வந்த சமுதாயக்கூடம் மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து கடந்த 5 வருடங்களுக்கு முன்பு முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது. பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகப் பகுதியில் செயல்பட்டு வந்த சமுதாயக்கூடத்தில் உணவுக்கூடம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாத காரணத்தினால் அதுவும் செயல்பாட்டில் இல்லை. இதனால் மானாமதுரை பொதுமக்கள் குறைந்த செலவில் இல்ல நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் தவிக்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, தனியாரிடம் ரூ.50 ஆயிரம் செலவு செய்து மண்டபங்கள் பிடிக்க முடியவில்லை. எம்.எல்.ஏ., அலுவலகம் பின்னால் இடித்த சமுதாயக்கூடத்தை மீண்டும் கட்ட வேண்டும் அல்லது நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என்றனர்.