நெடுஞ்சாலையில் பள்ளம் செடி நட்ட போலீஸ்
காரைக்குடி : காரைக்குடி நெடுஞ்சாலையில் உருவான திடீர் பள்ளத்தால் விபத்தை தடுக்க போலீசார், செடிகள் நட்டு, தடுப்பு அமைத்துள்ளனர். காரைக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்துள்ளது. தேவகோட்டை ரஸ்தாவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் இருந்து சுத்திகரிப்பு நிலையம் வரை கழிவுநீர் செல்லும் வகையில் தேவகோட்டை நெடுஞ்சாலையில் ஆள்நுழைவு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் பாதாள சாக்கடையில் மழைநீர் புகுந்து ஆங்காங்கே கழிவு வெளியேறி வருகிறது. நெடுஞ்சாலையில் அவ்வப்போது திடீர் பள்ளம் ஏற்படுவது தொடர்கிறது.கடந்த சில தினங்களுக்கு முன்பு தேவகோட்டை சாலையில் திடீர் பள்ளம் தோன்றியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் செஞ்சையில், சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படாமல் தடுக்க சாலையின் நடுவே செடிகள் நடப்பட்டு தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.