மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக போராட்டம் மானாமதுரையில் கட்டுமான பணி நிறுத்தம்
மானாமதுரை: மானாமதுரை சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கடையடைப்பு, முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டக் குழுவினருடன் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் ஆலை கட்டுமான பணி நிறுத்தப்படும், 2 மாதத்திற்குள் அரசிடமிருந்து ஆலையை மூட உத்தரவு பெற்றுத் தரப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்காக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மானாமதுரையில் நடைபெற்றது. பல்வேறு தரப்பினர் ஆலை அமையக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஒரு வருடமாக சிப்காட் வளாகத்தில் கட்டுமான பணி நடைபெற்ற நிலையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டம் நடத்திய நிலையில் மாவட்ட கலெக்டராக ஆஷா அஜித் இருந்த போது ஆலை கட்டுமான பணிகள் நிறுத்தப்படுவதாக தெரிவித்தார். அவர் மாறுதலாகி சென்ற பிறகு தொடர்ந்து ஆலை கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கியது. நேற்று மானாமதுரையில் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என அறிவிப்பு செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பெரியகருப்பன், எம்.எல்.ஏ., தமிழரசி, மாவட்ட கலெக்டர் பொற்கொடி உள்ளிட்டோர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்து போராட்டத்தை கைவிடுமாறு கூறினர். ஆனால் அதனை ஏற்காத போராட்டக் குழுவினர் திட்டமிட்ட படி போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.நேற்று மானாமதுரையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சிப்காட் வளாகத்தில் உள்ள ஆலையை முற்றுகையிடுவதற்காக சென்றபோது போலீசார் தடுப்புகளை வைத்து மக்களை தடுத்தனர். மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்.பி, சிவபிரசாத்,கோட்டாட்சியர் ஜெசி கிரேசியா மற்றும் போராட்ட குழு தலைவர் வீரபாண்டி, வர்த்தக சங்கத் தலைவர் பாலகுருசாமி மற்றும் சர்வ கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிகாரிகள் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையை நிறுத்துவதற்கான முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி வைத்து 2 மாத காலத்திற்குள் உரிய உத்தரவு பெற்று தருவது, அரசிடம் இருந்து உரிய பதில் வரும் வரை கட்டுமான பணியை நிறுத்துவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்ட குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.