இரவோடு இரவாக நிழற்குடை அகற்றம்; பொதுமக்கள் முற்றுகை: அதிகாரிகள் சமரசம்
காரைக்குடி; காரைக்குடி பர்மாகாலனியில் இருந்த பயணிகள் நிழற்குடை இரவோடு இரவாக அகற்றப்பட்டதாக கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள பர்மா காலனியில் பஸ் ஸ்டாப் ஒன்று இருந்தது. தற்போது சங்கராபுரம் ஊராட்சி காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை பயணிகள் நிழற்குடை முன்னறிவிப்பின்றி திடீரென்று அகற்றப்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். பஸ் ஸ்டாப்பிற்கு எதிரே அமைய உள்ள தனியார் மதுக்கடைக்காக பஸ் ஸ்டாப் அகற்றப்பட்டது என்று கூறி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தாசில்தார் ராஜா மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.சாக்கோட்டை யூனியன் அதிகாரிகள் கூறுகையில், பர்மா காலனியில் பழைய பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய நிழற்குடை கட்டப்பட உள்ளது. சங்கராபுரம் ஊராட்சி காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடித்து மாநகராட்சியிடம், முழுமையாக ஊராட்சியை ஒப்படைக்க வேண்டும், என்றனர்.