ஆக்கிரமிப்புகளை அடையாளம் காட்டிய ஆற்று வெள்ளம்
சிங்கம்புணரி: சிங்கம்புணரி வழியாக செல்லும் ஆறுகளில் ஆக்கிரமிப்புகள் பெருகி வந்த நிலையில் அவற்றை தற்போது வந்துள்ள வெள்ளம் அடையாளம் காட்டிச்சென்றுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் உருவாகும் பாலாறும், நத்தம் அருகே சிறுமலை பகுதியில் உருவாகும் உப்பாறும் பல்வேறு ஊர்களைக் கடந்து சிங்கம்புணரியில் ஒன்றாக கலக்கிறது. பிறகு அங்கிருந்து பாலாறு என்ற பெயரில் திருப்புத்தூர் பெரிய கண்மாய் வரை சென்று அங்கிருந்து விருசுழியாறு என்ற பெயரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. இந்த ஆறுகள் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வந்தது.ஆறுகளை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருந்தது. இது ஆக்கிரமிப்பாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து அவர்கள் மேலும் ஆறுகளை ஆக்கிரமிக்க தொடங்கினர். இந்நிலையில் தற்போது பாலாறு உப்பாறுகளில் சிறிய அளவில் வெள்ளம் வந்து தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் ஆக்கிரமிப்புகளின் எல்லையை முதற்கட்டமாக அடையாளம் காட்டியுள்ளது. பெருவெள்ளம் வருகிற பட்சத்தில் ஆக்கிரமிப்புகளால் பக்கத்து கிராமங்கள் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே இனியாவது பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரண்டு ஆறுகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆறுகளை சீராக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.