மின்கம்பம் சேதம் குடிநீர் வினியோகம் பாதிப்பு லாரிக்கு ரூ.25,000 அபராதம்
சிவகங்கை: மானாமதுரை அருகே லாரி மோதியதில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு சென்ற 5 மின்கம்பம் சேதமானதால், கூட்டு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.மானாமதுரை தாலுகா தெ.புதுக்கோட்டை உட்பட 5க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வைகை ஆற்றில் ஆழ்குழாய் அமைத்து பி.ஆலங்குளம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். இக்கூட்டு குடிநீர் திட்ட மின்மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மின் இணைப்பு செல்லும் 5க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை, கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் சென்ற லாரிகள் இடித்து சேதமாக்கியது.கடந்த சில நாட்களாக கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு மின் இணைப்பு இன்றி, 5 கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும்பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மின்வாரிய நிர்வாகம், மின்கம்பங்களை இடித்து தள்ளிய லாரிகளின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து, மின்கம்பங்களை மாற்றி மின் இணைப்பு வழங்க வேண்டும் என கிராமத்தினர் கலெக்டர் (பொறுப்பு) செல்வசுரபியிடம் நேற்று மனு அளித்தனர். ஒரு வாரமாக குடிநீரின்றி அவதி
தெ.புதுக்கோட்டை முத்தையா கூறியதாவது:இரவில் அவ்வழியாக செல்லும் மணல் லாரிகள் மின்கம்பங்களை இடித்து விட்டு சென்றதால் ஒரு வாரமாக மின் இணைப்பின்றி, கூட்டு குடிநீர் திட்டம் செயல்படவில்லை. இதனால் 5 கிராம மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை.இதை கண்டித்து தான் கலெக்டரிடம் மனு செய்தோம், என்றார். மானாமதுரை மின்வாரிய அதிகாரி கூறியதாவது: தெ.புதுக்கோட்டை அருகே 5 மின்கம்பங்களை இடித்து சென்றுள்ளனர். அந்த லாரிகளின் உரிமையாளர்கள் ரூ.25,000 அபராதம் செலுத்தி விட்டனர். சேதமான 5 மின்கம்பங்களுக்கு புதிய கம்பம் பொருத்தி, மின் இணைப்பு வழங்கப்படும், என்றார்.