வடக்கு அண்டக்குடியில் இடியும் நிலையில் பள்ளி : 2 ஆண்டாக மகளிர் குழு கட்டடத்தில் செயல்படுகிறது
இளையான்குடி அருகே உள்ள வடக்கு அண்டக்குடியில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி கட்டடம் கட்டப்பட்டு நீண்ட வருடமானதை அடுத்து கட்டடம் அவ்வப்போது பெயர்ந்து விழுந்ததை தொடர்ந்து கடந்த 2 வருடங்களுக்கு முன் அக்கட்டடத்தில் பள்ளி செயல்படாமல் அருகில் உள்ள மகளிர் சுய உதவி குழு கட்டடத்திற்கு மாற்றப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது.இங்கு மாணவர்களுக்கு போதுமான வகுப்பறை இல்லாத காரணத்தினால் மாணவர்கள் சிரமப்பட்டு கல்வி பயின்று வருகின்றனர். மேலும் பள்ளி கட்டடத்திற்குரிய வசதி இல்லாத காரணத்தினாலும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த 2 வருடமாக குறைந்து வருகிறது. இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: பள்ளி கட்டடம் மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து அதனை சீரமைக்க வேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டுமென்று மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மாவட்ட நிர்வாகம் வடக்கு அண்டக்குடியில் புதிய நடுநிலைப்பள்ளி கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.மகளிர் பள்ளிக்கு மாற்று இடம்: மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 1800க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். போதுமான கட்டட வசதி இல்லாத காரணத்தினால் ஒவ்வொரு வகுப்பறையிலும் 40 மாணவிகள் இருக்க வேண்டிய இடத்தில் 60க்கும் மேற்பட்ட மாணவிகள் நெருக்கடியில் அமரும் நிலை ஏற்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சைக்கிள் வழங்கும் விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,தமிழரசி பேசுகையில், பள்ளியில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தினால் மாணவிகள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிற நிலையில் மாணவிகளின் நலன் கருதி அருகிலேயே பள்ளிக்கு மாற்று இடம் தேர்வு செய்வதற்கான பணி நடைபெற்று வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் இடம் தேர்வு செய்யப்பட்டவுடன் கட்டடங்கள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளதாக கூறினார்.