பள்ளிகள் திறந்தாச்சு பிரச்னையும் துவங்கியாச்சு
சிவகங்கை: சிவகங்கையில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த நிலையில் மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் நிலை மீண்டும் துவங்கி விட்டது.சிவகங்கையில் இரண்டு அரசு மேல்நிலைப்பள்ளி, இரண்டு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, ஒரு அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் கிராமத்தில்இருந்து அரசு பஸ்சில் தான் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மேலுார் பகுதியில் உள்ள சக்கந்தி, இடையமேலுார், புதுப்பட்டி, கூட்டுறவுபட்டி, மலம்பட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சிவகங்கை பள்ளி கல்லுாரிகளில் படித்து வருகின்றனர். நேற்று விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த நிலையில் மேலுார் செல்லும் பஸ்சில் பழையகோர்ட் வாசலில் நின்று மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் ஏறமுடியாமல் தொங்கியபடி சென்றனர். இந்த பகுதியில் காலை, மாலை நேரங்களில் பள்ளி கல்லுாரி செல்லும் மாணவர்களின் நலனில் அக்கரை கொண்டு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.