வட மாநிலத்தவருக்கு அரிவாள் வெட்டு
திருப்புவனம்: மணலுாரில் வட மாநிலத்தவர்கள் மீது கஞ்சா கும்பல், கொலை வெறி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மணலுாரில் தனியார் நிறுவனம் பந்து தயாரித்து விற்பனை செய்கிறது. இதில் மணலுார், திருப்புவனம், மதுரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 600 பேர், பீஹார், ஒடிஷா மாநிலங்களைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இதில் பீஹார், ஒடிஷா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நிறுவனத்தின் பின்புறம் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சுசிந்தா தேஹரி, 20, மனுசோரன், 33, உள்ளிட்ட ஆறு பேர், அப்பகுதியில் இயற்கை உபாதைக்காக சென்றனர். நான்கு பேர் வைகை ஆற்றிற்குள் செல்ல, இருவர் மட்டும் பாதையில் நின்று பேசி கொண்டிருந்தனர். அங்கு அரிவாளுடன் வந்த இருவர், அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி, அரிவாளால் வெட்டினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு மற்ற நான்கு பேரும் வர, தாக்குதல் நடத்திய இருவரும் தப்பினர். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.