காரைக்குடி மாநகராட்சியில் விரைவில் ரகசிய ஓட்டெடுப்பு: கமிஷனர் தகவல்
காரைக்குடி:காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்துத்துரைக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான கோரிக்கையில் கூட்டம் நடத்தி ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், விரைவில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என கமிஷனர் தெரிவித்தார்.காரைக்குடி மாநகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க., 18, அ.தி.மு.க., 7, காங்., 3, இ.கம்யூ.,1, சுயேச்சை 7 பேர். இதில், 14 வது வார்டு கவுன்சிலர், ராஜினாமா செய்த நிலையில் 35 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க.,வை சேர்ந்த முத்துத்துரை மேயராகவும், தி.மு.க., நகரச் செயலாளர் குணசேகரன் துணை மேயராகவும் உள்ளனர். மேயர் முத்துத்துரை மீது அதிருப்தி தெரிவித்து 23 கவுன்சிலர்கள், நம்பிக்கை இல்ல தீர்மானம் கொண்டு வர துணை மேயர் குணசேகரன் தலைமையில், கமிஷனர் சங்கரனிடம் மனு அளித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர போதிய கவுன்சிலர்கள் ஆதரவு இருந்தும் அவசர கூட்டத்தை கூட்ட கமிஷனர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிஅ.தி.மு.க., கவுன்சிலர் ராம்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.விசாரணை நடத்திய நீதிபதி, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மனு அளித்த தேதியில் இருந்து, 30 நாட்களுக்குள் மாநகராட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். விதிகளின்படி ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.கமிஷனர் சங்கரன் கூறுகையில்:உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரகசிய ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது. கோர்ட் உத்தரவின் படி விரைவில் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.