அங்கீகார விற்பனை நிலையங்களில் விதை துணை இயக்குனர் தகவல்
சிவகங்கை: விவசாயிகள் அரசு அங்கீகரித்த விதை விற்பனை நிறுவனங்களில் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் என சிவகங்கை விதை ஆய்வு துணை இயக்குனர் இப்ராம்சா தெரிவித்தார். அவர் கூறியதாவது: விதை விற்பனை லைசென்ஸ் இன்றி விதை விற்பனை மற்றும் இருப்பு வைப்பது விதை சட்டம் 1966ன் படி குற்றம். மத்திய அரசு நியமித்த விதை குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பயிர்கள்மற்றும் ரகங்களின் விதைகளை மட்டுமே விற்க வேண்டும். இந்த விதைகள் குறைந்த பட்ச முளைப்பு திறன், புறத்துாய்மை கொண்டிருக்க வேண்டும். விதை கொள்கலன்களில் சான்று அட்டைகளுடன் விவரச்சீட்டு எண், பயிர் ரகம், ஆண்டு, காலாவதி நாள், முளைப்புத்திறன், புறத்துாய்மை, இனத்துாய்மை, எடை, விதை நேர்த்திக்காக ஏதேனும் ரசாயனம் பயன்படுத்தி இருந்தால் அதன் விபரம், விதை விற்பனையாளர், உற்பத்தியாளர் விபரம், எந்த மாநிலத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறது. எந்த பருவத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறது போன்றவை விபரச்சீட்டில் இருக்க வேண்டும். விதைகளை அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்க கூடாது, என்றார்.