உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை வைகை ஆற்றின் கரையில் கடைகள் ஆக்கிரமிப்பு: அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

மானாமதுரை வைகை ஆற்றின் கரையில் கடைகள் ஆக்கிரமிப்பு: அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

தேனி மாவட்டம், மூலவைகையில் உற்பத்தியாகும் ஆறு, வைகை ஆறாக உருவெடுத்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயத்திற்கும், கூட்டு குடிநீர் திட்டங்களுக்காகவும் பயன்படுகிறது. தென்மாவட்ட மக்களின்முக்கிய நீராதாரமான வைகை ஆற்றை காக்க வேண்டியது ஒவ்வொரு கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கடமையாக இருந்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டாக வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதும், ஆற்றை ஒட்டி கடைகள் கட்டியும், விவசாயம் செய்தும் ஆக்கிரமித்து வருவது அதிகரித்துவிட்டன. இதனால், வைகை ஆற்றின் அகலம் வெகுவாககுறைந்துவிட்டதால், வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக கண்மாய்களை நிரப்பி செல்லாமல், விரைந்து சென்று கடலில் கலந்து விடுகிறது. குறிப்பாக மானாமதுரையில் வைகை ஆற்றின் கரையோரம் விவசாயம் செய்தும், கடைகள் கட்டி ஆக்கிரமித்து வருகின்றனர். இது குறித்து சிவகங்கை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜித்திடம் பல முறை புகார் தெரிவித்தும், ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

300 மீட்டர் அகலமாக சுருங்கிய ஆறு

இது குறித்து கீழ்வைகை வடிநில விவசாய சங்க நிர்வாகி அய்யாச்சாமி கூறியதாவது:பல முறை கலெக்டரிடம் வைகை ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு விவசாயிகள் வலியுறுத்தினோம். சமீபகாலமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையும்பல முறை ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை வழங்க கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மானாமதுரை வைகை ஆற்றில் பனிக்கனேந்தல், சிவகங்கை பைபாஸ் ரோடு அருகே விவசாயம் செய்தும், மானாமதுரை சந்தைகடையில் கடைகள் அமைத்தும் ஆக்கிரமித்துவிட்டதால், 500 மீட்டர் அகலத்தில் இருந்த வைகை ஆறு, 300 மீட்டர் அகலமாக குறைந்துவிட்டது, என்றார்.

ஆக்கிரமிப்பு இடம் அளவீடு

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறியதாவது: மானாமதுரை வைகை ஆற்றின் கரையில் ஆக்கிரமித்துள்ள கடைகள்,விவசாய நிலங்களை அகற்ற, வருவாய்துறை மூலம் வைகை ஆற்றிற்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்து வருகிறோம். இந்த அளவீட்டிற்கு பின் ஆற்றின் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீட்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி