காரைக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை: துாய்மை பணியாளர்களும் இல்லாததால் பாதிப்பு
காரைக்குடி: காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாத நிலையில் குறைந்த அளவிலான துாய்மை பணியாளர்களே பணியில் உள்ளதால் சுகாதாரப் பணியிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு காரைக்குடி மட்டுமன்றி புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை, பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர். இங்கு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, அவசர சிகிச்சை, ரத்த வங்கி, சிடி ஸ்கேன், டயாலிசிஸ், காது, மூக்கு தொண்டை பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். மாதத்திற்கு 200-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கிறது. மகப்பேறு உட்பட பல்வேறு சிறப்பு பிரிவுகளிலும் டாக்டர்கள் பற்றாக்குறை தொடர்கதையாகி வருகிறது. தொடர்ந்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. போதிய துாய்மைப் பணியாளர்கள் இல்லாததால் பணிகளில் பல்வேறு சிக்கல் நிலவி வருகிறது. இம்மருத்துவமனையில், உள் நோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, காய்ச்சல் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் 200க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இங்கு ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 50 பேர் இருக்க வேண்டிய நிலையில், 20 துாய்மை பணியாளர்களே உள்ளனர். 4 படுக்கைக்கு ஒரு துாய்மை பணியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில் மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே பணியாளர்கள் உள்ளதால், பிரசவ வார்டு, உள் நோயாளிகள் பிரிவு, மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுகாதாரம் மோசமாக உள்ளது. தவிர கூடுதல் பணிச்சுமையால் துாய்மை பணியாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், டாக்டர்கள் போதுமான அளவிற்கு உள்ளனர்.போதிய துாய்மை பணியாளர்களை நியமித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.