சிறுபான்மை மாணவர்களுக்கு கல்விக்கடன் சிறப்பு முகாம்
சிவகங்கை: மாவட்டத்தில் சிறுபான்மை மாணவர்களுக்கு உயர்கல்விக்காக ரூ.30 லட்சம் வரை சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடனுதவி வழங்கப்பட உள்ளது.தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்பு, வருமானம் தரும் செயல்பாட்டிற்கு குறைந்த வட்டியில் தனிநபர், சுயஉதவி குழு சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்கள்கடன், கல்வி கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் இருவகை திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படுகிறது. முதல் திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமும், திட்டம் 2 ல் பயன்பெற ரூ.8 லட்சத்திற்கு மிகாமல்இருத்தல் வேண்டும். முதல் திட்டப்படி தனி நபர் கடனுக்கு ஆண்டுக்கு 6 சதவீத வட்டி வீதம் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரையும், திட்டம் 2 ன் கீழ் ஆண்டுக்கு 8 சதவீத வட்டியில், பெண்களுக்கு 6 சதவீத வட்டியில் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படும். கைவினை கலைஞர் ஆணுக்கு 5 சதவீதம், பெண்ணுக்கு 4 சதவீத வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இது மட்டுமின்றி சுயஉதவி குழு கடனாக நபருக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டியில் ரூ.1 லட்சம் வழங்கப்படும். திட்டம் 2ன் படி ஆணுக்கு 10, பெண்ணுக்கு 8 சதவீத வட்டியில் நபருக்கு ரூ.1.50 லட்சம் வரை கடன் வழங்கப்படும். சிறுபான்மை மாணவர்கள் அரசால் அங்கீகரித்த கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி படிப்போருக்கு அதிகபட்சம் 3 சதவீத வட்டியில்ரூ.20 லட்சமும், திட்டம் 2ன் படி மாணவருக்கு 8, மாணவிக்கு 5 சதவீத வட்டியில் ரூ.30 லட்சம் வரை கல்வி கடன் உதவி வழங்கப்படும். இது குறித்த சிறப்பு முகாம் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடைபெறும். இன்று சிவகங்கை, நாளை மானாமதுரை, ஜூன் 6ல் இளையான்குடி, ஜூன் 10ல் திருப்புவனம், ஜூன் 11ல் காளையார்கோவில், ஜூன் 12 ல்திருப்புத்துார், ஜூன் 13 சிங்கம்புணரி, ஜூன் 17 காரைக்குடி, ஜூன் 18ல் தேவகோட்டை தாசில்தார் அலுவலகங்களில் இந்த முகாம்கள் நடைபெறும்என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.