விளையாட்டு மைதானம் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு! அமைச்சர் தொகுதியில் போட்டி நடத்த வழியில்லை
அமைச்சர் பெரியகருப்பன் தொகுதியாக திருப்புத்துார் உள்ளது.முன்பு கல்வி மாவட்டமாகவும் இருந்தது. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான அரசு பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ,மாணவியர் தங்கள் விளையாட்டுப் பயிற்சிக்கு விளையாட்டு மைதானம் பள்ளிகளில் இல்லாமல் தவிக்கின்றனர். பொது விளையாட்டரங்கம் வசதி இல்லாததால் வெளியிலும் விளையாட்டுப் பயிற்சி பெற முடியவில்லை. பள்ளி வட்டார விளையாட்டு போட்டிகளும் அடிப்படை வசதி மற்றும் தகுதி இல்லாத மைதானங்களில் நடத்த வேண்டியுள்ளது.இதனால் இப்பகுதியினர் விளையாட்டில் சாதிப்பது கேள்விக்குறியாகி விட்டது. விளையாட்டரங்கம் இல்லாமல் விளையாட்டுப் பயிற்சியை குறிப்பிட்டத் தரத்திற்கு பெறமுடியாமல் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன்பாக தனியார் ஆர்வத்தில் இப்பகுதியில் கபடி, வாலிபால், பால் பேட்மின்டன், கிரிக்கெட் விளையாட்டுப் பயிற்சி பெற்று தொடர்ந்து போட்டிகளும் நடத்தப்பட்டன. தற்போது கபடி தவிர எந்த போட்டிகளும் பெரிய அளவில் நடத்தப்படுவதில்லை. காரணம் அதற்கான விளையாட்டு மைதானம் இல்லாததே. குறிப்பாக 400 மீ., ஓட்டப்பந்தய மைதானம், ஈட்டி, குண்டு, வட்டு எறிதலுக்கான டிராக், உடற்பயிற்சி கூடம் ஆகிய தடகள விளையாட்டுகளுக்கும், கபடி, கால்பந்து, ஹாக்கி பேட்மின்டன், வாலிபால், கூடைப்பந்து ஆகிய குழு விளையாட்டுகளுக்கு என எதற்குமே நிரந்தர விளையாட்டு மைதானம் கிடையாது. தனி நபர் மற்றும் குழு விளையாட்டுக்கள் அடங்கிய விளையாட்டு அரங்கம் திருப்புத்துாரில் இல்லை. இதனால் விளையாட்டுகளில் ஆர்வமுள்ள திறமையான சிறுவர்களை கண்டறியும் வட்டாரப் பள்ளி போட்டிகள் முழு வசதியுடன் நடத்த முடிவதில்லை. பல முறை ஒன்றிய அளவில் ஊரக விளையாட்டு மைதானம் திருப்புத்துாரில் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வந்தாலும் நிறைவேற்றப்படவில்லை. பெயரளவில் ஊராட்சிகளில் தரையில் கற்களை எல்லையிட்டு காட்டி விளையாட்டு மைதானம் என்று எழுதி வைத்தது தான் மிச்சம். சிங்கம்புணரி ரோட்டில் மினி ஸ்டேடியம் இடத் தேர்வுடன் நின்று விட்டது. போக்குவரத்து வசதியுள்ள திருப்புத்துாரில் முழுமையான வசதியுடன் கூடிய திறந்தவெளி மற்றும் உள்ளரங்கு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் மூலம் துணை ஸ்டேடியம் அமைக்கவும், விளையாட்டுக்கான பயிற்சியாளர் நியமிக்கவும், விளையாட்டு ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.