UPDATED : செப் 07, 2026 09:55 PM | ADDED : செப் 07, 2026 09:54 PM
சிவகங்கை:மாவட்டத்தில் மானிய விலையில் விதை நெல் வழங்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எம்.சங்கரலட்சுமி தெரிவித்தார். அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் 80 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் 600 முதல் 700 டன் வரை விதை நெல்லுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இது வரை 150 டன் வரை மானியத்தில் விதை நெல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10 ஆண்டிற்கு உட்பட்ட ரகங்களுக்கு கிலோவிற்கு ரூ.20 மானியம் மற்றும் 10 ஆண்டிற்கு மேற்பட்ட ரகங்களுக்கு கிலோவிற்கு ரூ.10 மானியம் வழங்கப்படுகிறது. புதிய ரகங்களான கோ - 52 ரகம் 145 டன், கோ - 51 ரகம் 15 டன், கோ - 55 ரகம் 67 டன், டி.கே.எம்., 13 ரகம் 20 டன், டி.கே.எம்., 15 ரகம் 15 டன், ஆர்.என்.ஆர்., ரகம் 40 டன் போன்ற விதை நெல் அனைத்து வட்டாரங்களிலும் இருப்பில் உள்ளது. இது தவிர விதை சுத்தி நிலையங்களில் 92 டன் வரை உள்ளது. மேலும் மாற்றுப்பயிர் சாகுபடியில் சாகுபடிக்கு ஏற்ற குறைந்த வயதுடைய உளுந்து வம்பன் 10, வம்பன் 11 ரகரங்கள் 13 டன், கேழ்வரகு 150 கிலோ, குதிரை வாலி 820 கிலோ இருப்பு உள்ளது. விவசாயிகள் புதிய ரக நெல் விதைகளை மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் என்றார்.