உள்ளூர் செய்திகள்

தவிப்பு

இத்தாலுகாவில் உள்ள கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாயும் நிலையில், ஆறுகளிலும் தண்ணீர் வருகிறது. பலரும் விவசாயப் பணிகளை துவக்கியுள்ள நிலையில் கோயில் மாடுகள் பிரச்னையால் சிங்கம்புணரி, பிரான்மலை, எஸ்.எஸ்.கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பலர் தொடர்ந்து சில ஆண்டுகளாக பயிர் சாகுபடி செய்யாமல் தவித்து வருகின்றனர். இங்குள்ள கோயிலுக்கு பக்தர்களால் நேர்ந்து விடப்படும் மாடுகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பெருகிவிட்டது. அவை விவசாய காலங்களில் வயல்களில் நுழைந்து பயிர்களை அழித்து விடுகிறது. இரவு முழுவதும் கண்விழித்து காவல் இருந்தாலும் மாடுகள் கூட்டமாக புகுந்து பயிர்களை தின்று விடுகின்றன.சுற்றுவட்டார விவசாயிகள் சார்பில் பலமுறை கோரிக்கை வைத்தும் கோயில் மாடுகளை ஓரிடத்தில் அடைத்து பராமரிக்க நடவடிக்கை ஏதும் இல்லை. இப்பகுதி விவசாயிகள் பலர் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தற்போது பிரான்மலை, வேங்கைப்பட்டி, ஒடுவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் சிலர் வயல்களில் முள்வேலி மற்றும் வலைகளால் தடுப்புகளை அமைத்துள்ளனர். இவற்றை அமைக்க அதிக செலவு ஆவதால் வசதி இல்லாத விவசாயிகள் தவிக்கின்றனர். ரோட்டோரத்தில் உள்ள வயல்களுக்கு தடுப்புகளை அமைத்துக் கொள்வதால், பின்புறம் உள்ள வயல்களுக்கு விவசாயிகளும், வேளாண் இயந்திரங்களும் செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. விவசாயிகள் கூட்டமைப்பு அடிப்படையில் ஒட்டுமொத்த வயல் பரப்பையும் சுற்றி முள்வேலி அமைத்துக் கொடுத்தால் பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளும் பயிர் சாகுபடியை இடையூறு இல்லாமல் தொடர முடியும், விவசாயிகளுக்குள் ஏற்படும் பிரச்னைகளும் குறையும்.எனவே வேளாண்துறை மூலம் அனைத்து கிராமங்களிலும் விவசாய நிலப்பரப்பை சுற்றி மொத்தமாக முள்வேலி அமைத்துக் கொடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். கோயில் மாடுகள் விவசாய நிலங்களுக்குள் நுழையாமல் தடுக்க மாடுகளை பிடித்து ஒரே இடத்தில் அடைத்து பாதுகாக்க நிரந்த நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி