6 பேர் பலியான சிங்கம்புணரி குவாரி விபத்து: சஸ்பெண்ட் அதிகாரிக்கு மீண்டும் பணி
சிவகங்கை: சிங்கம்புணரி குவாரி விபத்து விசாரணையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட துணை தாசில்தாருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை மேகா புளூமெட்டல்ஸ் குவாரியில் பாறையை உடைக்க வெடி வைக்கும் போது பாறை சரிந்ததில், பணியில் இருந்த பொக்லைன் இயந்திர டிரைவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். விசாரணையில் லைசென்ஸ் காலாவதியான நிலையில் குவாரி இயங்கியது தெரியவந்தது.சிங்கம்புணரி தாசில்தார் பரிமளத்திற்கு 17 (பி) நோட்டீஸ் வழங்கி, அவரை திருப்புத்துாருக்கு பணியிட மாற்றம் செய்தும், மல்லாக்கோட்டை வி.ஏ.ஓ., பாலமுருகன், அப்போது சிவகங்கை கனிமவள இணை இயக்குனர் அலுவலக ஆர்.ஐ.,யாக இருந்து பதவி உயர்வு பெற்ற மானாமதுரை துணை தாசில்தார் வினோத்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தும் கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.குவாரியில் ‛ட்ரோன்' மூலம் நடத்திய ஆய்வில் விதி மீறி 400 அடி ஆழத்தில் கற்களை எடுத்து, அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாக குவாரி உரிமையாளர் மேகவர்ணத்திற்கு ரூ.91 கோடி அபராதம் விதித்து தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயூஸ் வெங்கட் வத்ஸ் உத்தரவிட்டார்.குவாரியில் அன்றாடம் பயன்படுத்தப்படும் வெடி மருந்து, டெட்டனேட்டர் குச்சிகளின் இருப்பு, எங்கிருந்து வாங்கப்பட்டது என்ற விபரங்களை மாதந்தோறும் அந்த எல்கைக்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், தாசில்தார் ஆகியோர் சேகரித்து, மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். விபத்து நடந்த குவாரி 8 மாதமாக லைசென்ஸ் இன்றி செயல்பட்டதன் மூலம், இவர்கள் வெடிமருந்து குறித்த ஆய்வினை மேற்கொள்ளவில்லை என தெரியவந்தது. இந்நிலையில் லைசென்ஸ் காலாவதியான 8 மாத காலத்தில் விபத்து நடந்த குவாரிக்கு வாங்கிய வெடிமருந்து, டெட்டனேட்டர் குச்சிகள் குறித்தும் விசாரிக்கின்றனர்.
மீண்டும் பணி
இந்நிலையில் வினோத்குமாரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, காளையார்கோவில் துணை தாசில்தாராக (தேர்தல்) நியமித்து, ஜூன் 23ல் கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார். மல்லாக்கோட்டை வி.ஏ.ஓ.,விற்கும் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற்று வேறு தாலுகாவிற்கு மாறுதல் வழங்குமாறு தேவகோட்டை சப்- கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார்.சஸ்பெண்ட் உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.