அதிக முதலீடு வருவதால் தமிழகம்வளர்ச்சி அடைந்த மாநிலம் தான் * கார்த்தி எம்.பி., பேட்டி
சிவகங்கை:''இந்திய அளவில் அதிக கடன் வாங்கும் பட்டியலில் தமிழகம் இருந்தாலும் அதிக முதலீடு வருவதால் வளர்ச்சி அடைந்த மாநிலமாக தான் பார்க்க வேண்டும்,'' என, சிவகங்கையில் காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அனைத்து மகளிருக்கும் பாகுபாடின்றி உரிமைத்தொகை வழங்க வேண்டும். அப்போது தான் அவர்களது பொருளாதாரம் வளர்வதுடன் கிராம பொருளாதாரமும் மேம்படும். மற்ற திட்டங்களை விட நேரடியாக மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும்.பா.ஜ., கூட்டணி பலமாக இருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியது அவரது சொந்த கருத்து. தமிழகத்தில் இண்டியா கூட்டணி பலமாக உள்ளது. சட்டசபை தேர்தலில் இக்கூட்டணி வெற்றி பெறும். பா.ஜ., கையாளும் யுக்திகளுக்கு ஈடாக இண்டியா கூட்டணியில் யுக்திகள் இல்லை என்பதை தான் அவர் சொல்ல வருகிறார்.பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை நீதிமன்றம் மட்டுமே தந்தது. இதற்கு எந்த கட்சிகளோ, வேறு யாருமோ சொந்தம் கொண்டாட முடியாது. பொள்ளாச்சி, சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு கண்டிக்கத்தக்க சம்பவங்கள். சென்னை மாணவி பாலியல் வழக்கிற்கும் நல்ல தீர்ப்பு வர வேண்டும்.தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான பொருளாதார மாற்றம் வேண்டும். மின்வாரியத்திற்கு மட்டுமே ரூ.லட்சம் கோடி கடன் உள்ளது. இத்துறையில் இருந்து வரும் வருமானம் முழுவதையும், அக்கடனுக்கான வட்டியை தான் கட்டமுடியும். தமிழகத்திற்கு அதிக முதலீடு வருவதால், வளர்ச்சி அடைந்த மாநிலமாக தான் பார்க்கிறோம்.டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது அரசியல் காரணத்திற்காக வைக்கும் குற்றச்சாட்டா அல்லது ஆக்கப்பூர்வமான விசாரணையா என்பதை அமலாக்கத்துறை வழங்கும் விசாரணை அறிக்கை மூலம் தான் தெரியவரும்.2026 சட்டசபை தேர்தலில் இரண்டு, மூன்று, நான்கு முனை என எந்தவிதமான போட்டி ஏற்படும் என்பதை பொறுத்தே, அந்த நேரத்தில் ஏற்படும் பொருளை மையமாக வைத்து தான் தேர்தல் பிரசாரங்கள் இருக்கும் என்றார்.