ஆடு மேய்க்க சிறுவனை அனுப்பிய பெரியம்மா அடித்து துன்புறுத்துவதாகவும் புகார்
சிவகங்கை: இளையான்குடியில் சிறுவனை பள்ளிக்கு அனுப்பாமல் ஆடு மேய்க்க அனுப்புவதாக, அச்சிறுவன் பெரியம்மா மீது கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அம்மனு மீதான விசாரணையை குழந்தைகள் நல அலுவலர் மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே விஸ்வநாதபுரத்தை சேர்ந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டிற்கு முன் குழந்தைகளின் தாயார் தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிருப்தியில் இருந்த தந்தை விபத்தில் பலியானார். குழந்தைகள் பெற்றோரின்றி தவித்தனர். இதில் இருவர் அவர்களது அத்தை வீட்டிற்கு சென்று விட்டனர். ஒரு சிறுவன் மட்டும் கடந்த 5 ஆண்டாக இளையான்குடி அருகே திருவள்ளூரில் உள்ள தனது பாட்டி, பெரியம்மா ஆகியோர் பராமரிப்பில் இருந்து, இளையான்குடி அரசு மேல்நிலைபள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். இச்சிறுவனை அவரது பெரியம்மா, ஆடுகளை மேய்த்தும், தீவனம் எடுத்து வரக்கூறி துன்புறுத்தியுள்ளாராம். ஒரு கட்டத்தில் அச்சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார். மேலும், பள்ளிக்கு அனுப்பாமல் பல மாதங்கள் அச்சிறுவனை துன்புறுத்தியுள்ளனர். இதையடுத்து தனது பெரியம்மாவிடம் இருந்து தன்னை விடுவித்து, அரசு இல்லத்தில் தங்கி படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவன் நேற்று தனது அத்தையுடன் சிவகங்கை கலெக்டரிடம் நேரடியாக மனு அளித்தார். இம்மனுவின் மீது மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விசாரணைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கட்டி வைத்து அடிக்கவில்லை
சிறுவனின் பெரியம்மா கூறியதாவது: நான் அங்கன்வாடி மைய ஆசிரியை. என் கணவர் துபாயில் வேலை செய்கிறார். தங்கை மகனை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், என் அம்மாவின் ஆசைப்படி தான் என் வீட்டிற்கு அழைத்து வந்தேன். அச்சிறுவனை திட்டியதுண்டு, ஒரு நாள் கூட அடித்தது இல்லை, என்றார்.