உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேளாண் பணிகளுக்காக எஸ்.புதுார் விவசாயிகள் வேளாண் உதவி இயக்குநர் பணியிடம் ரத்து

வேளாண் பணிகளுக்காக எஸ்.புதுார் விவசாயிகள் வேளாண் உதவி இயக்குநர் பணியிடம் ரத்து

எஸ்.புதுார்: எஸ்.புதுார் ஒன்றியத்துக்கான வேளாண்மை உதவி இயக்குனர் பணியிடம் ரத்து செய்யப்பட்டதால் விவசாயிகள் வீண் அலைச்சலுக்கு ஆளாகின்றனர்.சிங்கம்புணரி ஒன்றியத்தில் இருந்து 1995ம் ஆண்டு எஸ்.புதுார் ஒன்றியம் பிரிக்கப்பட்டு புதிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது. அப்போதே இங்கு வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர் பணியிடமும் ஏற்படுத்தப்பட்டு அலுவலகம் இயங்கி வருகிறது. மாவட்டத்தில் முக்கிய வேளாண் பகுதியான இவ்வொன்றியத்தில் நெல், கடலை மிளகாய், தென்னை என பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.10 ஆயிரம் ஏக்கரில் அனைத்து வகை பயிர்களும் ஆண்டு முழுவதும் சுழற்சி அடிப்படையில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் நெல் 2000 ஏக்கரிலும், கடலை 1200 ஏக்கரிலும், சிறுதானியம் பருத்தி மிளகாய் உள்ளிட்டவை 2000 ஏக்கரிலும் சாகுபடி செய்யப்படுகிறது. 1000 ஏக்கருக்கு மேல் தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. சிறிய ஒன்றியமாக இருந்தாலும் அனைத்து மக்களும் முழு அளவில் விவசாயத்தில் ஈடுபடக்கூடிய பகுதியாக இவ்வொன்றியம் விளங்குகிறது.இங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில் நெல் சாகுபடி குறைவாக இருப்பதை காரணம் காட்டி இங்கு செயல்பட்டு வந்த வேளாண்மை உதவி இயக்குனர் பணியிடம் கடந்த 2020 ஜூலையில் ரத்து செய்யப்பட்டு சிங்கம்புணரி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தோடு இணைக்கப்பட்டது. இரு ஒன்றியத்துக்கும் தனித்தனியாக வேளாண்மை உதவி இயக்குனர் இருந்த நிலையில் தற்போது ஒரு அதிகாரி மட்டும் இரண்டு ஒன்றியங்களையும் பார்வையிட்டு வருகிறார். இதனால் வேளாண் தொடர்பான பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. விவசாயிகள் வேளாண் உதவி இயக்குநரை தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஏற்கனவே பருவநிலை மாறுபாடு, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் சில ஆண்டுகளாக இப்பகுதி விவசாயம் பொய்த்து வரும் நிலையில், வேளாண்மை உதவி இயக்குனர் பணியிடம் இல்லாதது இப்பகுதி விவசாயத்தை ஊக்குவிப்பதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.பி.மென்னன், விவசாயி ; மாவட்டத்திலேயே அதிக அளவில் வேளாண், தோட்ட பயிர்களை சாகுபடி செய்யும் ஒன்றியமாக எஸ்.புதுார் உள்ளது. இங்கு அனைவரும் முழுக்க விவசாயத்தை நம்பி உள்ளனர். இதை கருத்தில் கொண்டு தான் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்ட போது உதவி இயக்குனர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டு அலுவலகம் அமைக்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிடத்தை ரத்து செய்து சிங்கம்புணரியோடு இணைத்து விட்டார்கள். இதனால் வேளாண் பணி நிமித்தமாக அதிகாரியை சந்திக்க வீண் அலைச்சலுடன் ஒரு நாள் வேலைகளை விட்டு விட்டு சென்று வர வேண்டி உள்ளது. மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் உதவி இயக்குனர் பணியிடம் இருக்கும்போது இவ்வொன்றியத்தில் மட்டும் அப்பணியிடத்தை ரத்து செய்தது எங்களை புறக்கணிப்பதாக உள்ளது. எனவே மீண்டும் இவ்வொன்றியத்திற்கு வேளாண்மை உதவி இயக்குனர் பணியிடத்தை உருவாக்கி அலுவலரை நியமிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி